87-வது விமானப்படை தினம் - மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி

0 342

இந்திய விமானப் படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படைத் தளபதிகள் மரியாதை செலுத்தினர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் போர் விமானங்களின் சாகசங்கள் நடைபெற்றன. 

1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் உருவாக்கப்பட்ட இந்திய விமானப் படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விமானப் படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கவுரவப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தைரியம் மற்றும் உறுதியுடன் வானின் பாதுகாவலர்களாக விளங்கும், வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் இந்தியா எப்போதும் கடன்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், விமானப் படையின் பெருமையை பறைசாற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெருமைமிகு நாடு நன்றி கூறுவதாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடன் விமானப் படை தொடர்ந்து சேவை செய்யும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

விமானப் படை தினத்தை முன்னிட்டு, ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைமைத் தளபதி கரம்பீர் சிங் மற்றும் விமானப் படைத் தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடம் சென்றனர். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அவர்கள் மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய விமானப் படைத் தலைமைத் தளபதி பதாரியா, தீவிரவாதத்தைக் கையாளுவதில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக பாலகோட் சர்ஜிகல் தாக்குதலைப் பாராட்டினார். இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்திற்கு அவர் சென்றார். வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

இதை அடுத்து, பாலகோட்டில் சர்ஜிகல் தாக்குதல் நடத்திய படைப்பிரிவுக்கு யுனிட் சைட்டேசன் என்ற விருதை பதாரியா வழங்கினார். பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை வீழ்த்தியதற்காக அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்ற படைப்பிரிவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

பின்னர் விமானப் படை சாகசம் தொடங்கியது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட சினூக் போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தன. மிராஜ் 2000, சுகோய் 30 எம்.கே.ஐ. ஆகிய போர் விமானங்கள், சாகசம் நிகழ்த்தின. மிக் பைசன் போர் விமானங்களின் சாகசத்தை, விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் முன்னின்று வழிநடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments