அமெரிக்காவில் வெள்ளம் வரவில்லையா? பீகாரில் மட்டும்தான் வந்ததா? - முதலமைச்சர் நிதிஷ் குமார்

0 214

அமெரிக்காவில் வெள்ளம் வரவில்லையா? பீகாரில் மட்டும்தான் வந்ததா? என்பது போல அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

36 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழைப் பொழிவு, விட்டு 2 நாட்கள் ஆகியும் பீகாரின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 48 மணி நேரத்துக்கும் மேலாக வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 12 கர்ப்பிணிகள் 332 நோயாளிகள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீட்டதாக தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதால், வீடுகளின் மேற்கூரைகளின் மீது தவிக்கும் மக்கள், தங்களது சட்டையைக் கழற்றி, கொடி போல அசைத்து ஹெலிகாப்டர் பைலட்டுக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

நீரை வடியச் செய்ய அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளத்தின் சூழல் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது மக்கள் அவரை முற்றுகையிட்டு நிவாரணம் கிடைக்கவில்லை என வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

நாட்டிலும், உலகிலும் எத்தனை இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன? பாட்னாவில் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது மட்டும் தான் பிரச்சனையா? எனக் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவில் என்ன நடந்தது? என்று அங்கு ஏற்பட்ட வெள்ள சூழல் குறித்தும் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார்.

கடும் மழையும், வறட்சியும் இயற்கையானது என்ற அவர், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கமளித்தார். வெள்ள நீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments