வெள்ளத்தில் தத்தளிக்கும் பாட்னா....மழை பாதிப்புகளுக்கு 27 பேர் பலி

0 451

பீகார் மாநிலம் பாட்னாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வந்தது. முக்கியமாக தலைநகர் பாட்னாவில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளான ராஜேந்திர நகர், பாடலிபுத்திரம் காலனி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது. மழை நீடித்து வந்த நிலையில் வெள்ளம் பாதித்த ஒரு சில பகுதிகளில் தற்போது மார்பளவுக்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

ஆறுதலளிக்கும் விதமாக பாட்னாவில் இன்று காலையில் சற்றே மழை ஓய்ந்திருப்பதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 19 குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து படகுகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாநகராட்சி கிரேன்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமர், உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சில பகுதிகளில், மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இந்திய விமானப் படையின் உதவியை நாடியுள்ள பீகார் அரசு, வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கவும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கவும் 2 ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு கேட்டுள்ளது.

மேலும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான எந்திரங்களையும் விமானப் படையிடம் கேட்டுள்ளது. வீடுகள் மட்டுமின்றி, மருத்துவமனைகள், மருந்தகங்களிலும் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ள தேங்கியுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரயில் நிலையங்களிலும் வெள்ளம் புகுந்திருப்பதால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்துவிடுமாறு இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் அறிவித்துள்ளது.

இதனிடையே 24 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே மழை முன்னறிவிப்பால் பாட்னாவில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. பீகாரின் அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்லியா மாவட்ட சிறையில் வெள்ளம் புகுந்துள்ளதால், அங்கிருந்து 500 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ள நிலை குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் பெய்த கனமழையால், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடியின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த அவரை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.  ரப்பர் படகின் மூலம்  சுஷில் மோடியும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments