பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து படுகாயம் அடைந்த மாணவிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு

0 330

அரசுப் பள்ளியில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த மாணவிக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டியைச் சேர்ந்த செல்வவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமது மகள் காயத்ரி, அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்ததாகவும், கடந்த ஜூலை 4ஆம் தேதி பள்ளியில் உள்ள கழிவறைக்குச் சென்ற அவர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தமது மகள் முழுமையாக குணமடையவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அதிக பணம் தேவைப்படும் என்பதால் 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும், அக்கறையின்மை, கவனக்குறைவு காரணமாகவே தன் மகளுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அக்டோபர் 1ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments