நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு உதவிய கேரள தரகர் - விசாரணையில் உதித்சூர்யா தகவல்

0 661

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆள் மாறாட்டத்திற்கு கேரளாவைச் சேர்ந்த தரகர் ஒருவரே ஏற்பாடு செய்த தாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து போலீசார் கேரளா விரைந்துள்ளனர். 

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சேர்ந்ததாக, கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சலில் புகார் வந்தது.

இதுதொடர்பாக கண்டமனூர் போலீசில், புகார் அளிக்கப்பட்டதை அடுத்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் தலைமறைவானார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், புதன் கிழமை அன்று திருப்பதியில் தனது குடும்பத்துடன் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார்.

தேனி தனிப்படை போலீசார் உதித் சூர்யாவையும், அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாய் கயல்விழி ஆகியோரை பிடித்து சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்தனர். நள்ளிரவில் அவர்கள் தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மருத்துவ கல்லூரி பேரரசிரியர்கள் 2 பேரை, சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதை அடுத்து அவர்கள் அனைவரும் காலை 9 மணி அளவில், சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். உதித் சூர்யா சேர்க்கை தொடர்பான ஆவணங்களுடன் அவர்கள் சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.

3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற அதேவேளையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான போலீசார் சோதனையும் நடத்தினர். அங்கு சில மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே உதித் சூர்யா மீதும், அவரது தந்தை வெங்கடேசன் மீதும், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மகன் மருத்துவர் ஆக வேண்டுமென்ற ஆசையில் இதுபோன்ற தவறை செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தவறை தற்போது உணர்ந்து விட்டதாகவும், எனவே தான் மகனுக்கு மருத்துவக் கல்வி தேவையில்லை என முடிவு செய்து இடையில் நிறுத்தி விட்டு சான்றிதழை வாங்கி சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெங்கடேசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள் மாறாட்டத்திற்கு கேரளாவைச் சேர்ந்த தரகர் ஒருவர் ஏற்பாடு செய்த தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த தரகரை பிடிக்க போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். அந்த தரகர் மூலமாக மேலும் பலர் இது போல மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருக்கலாம் என்று கருதுவதால், அவரை பிடித்து விசாரித்தால்

மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடுமென போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்னர், உதித்சூர்யாவையும், அவரது தந்தையையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து உதித் சூர்யாவின் தாய் கயல்விழி விடுவிக்கப்பட்டுள்ளார். எந்த நேரம் அழைத்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments