சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமட்டானா ? போலீசுக்கு சவால் விடும் களவானிகள்

0 340

தமிழகத்தில் கடந்த  ஒரு வாரகாலமாக முகாமிட்டு 20 க்கும் மேற்பட்ட கடைகளில் நூதன முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் வெள்ளைக்கார ஜோடி ஒரே நாளில் விழுப்புரத்தில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது. காவல்துறையினருக்கு சவால்விட்டு கொள்ளையடிக்கும் இந்த ஜோடியை பிடிக்க போலீசார் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

கடல்வழியாக தீவிரவாதி நுழைந்து விடாமல் இருக்க ஆண்டு தோறும் மார்க் டிரில் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி தங்களது பலத்தை நிரூபித்து வரும் தமிழக காவல்துறையினருக்கு தமிழகத்தில் ஊடுருவியுள்ள இரு வெள்ளைக்கார ஜோடி தொடர் பகல் கொள்ளையில் ஈடுபட்டு கடும் சவாலாக வலம் வந்து கொண்டிருக்கின்றது...!

பெரும்பாலான கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி யுள்ள இந்த மோசடி வெள்ளைக்கார ஜோடியின் புகைபடங்களும், வீடியோக்களும் ஆதாரமாக வெளியான பின்னரும் அவர்களை பிடிபடவில்லை....

அந்த வகையில் திருவாரூர், சிவகங்கை, திருச்சி மாவட்ட போலீசாருக்கு தண்ணி காட்டி தப்பித்த வெள்ளைகார கொள்ளையர்கள், விழுப்புரம் காவல்துறையினர் கண்களிலும் மண்ணை தூவி இரு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

வியாழக்கிழமை ஒரே நாளில் திருக்கோவிலூரில் உள்ள பாத்திரக்கடையிலும், தாழனூர் மற்றும் மணலூர் பேட்டை பெட்ரோல் பங்குகளிலும், நுழைந்த இந்த வெள்ளையர்கள், சிஎல் சீரியல் உள்ள ரூபாய் நோட்டை பார்ப்பதாக கூறி 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் தாள்களாக 27 ஆயிரம் ரூபாய் பணத்தை சாதுர்யமாக கொள்ளையடித்துள்ளனர்.

வெள்ளைக்கார பெண்ணுடன் செல்பி மோகத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் திளைத்திருக்க, காரில் வந்த ஒருவர், இவர்களை பற்றி டிவியில் செய்தி போடுகிறார்கள் கவனம் என்று எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

பக்கத்து மாவட்டங்களில் இது போல நடந்துள்ளது என்ற தகவலை சமூக அக்கறையுடன் ஊடகங்கள் வெளியிட்டுவரும் நேரத்தில் காவல்துறையினர் முறையான வாகன சோதனை நடத்தி இருந்தாலே இந்த ஜோடி சிக்கி இருக்கும். ஆனால் போலீசார் திருட்டு தொகை சிறிதாக இருப்பாதாக எண்ணி மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகின்றது.

இதுவரை 3 சம்பவம் என்று போலீசார் நம்பி இருந்த நிலையில் கடந்த 13 ந்தேதி திருத்துறைபூட்டியில் தொடங்கி 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து இருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைக்கார பெண்ணுடன் செல்பி எடுத்து பணத்தை பறி கொடுத்த விவாகாரம் வீட்டில் தெரிந்தால் குடும்பத்தில் குண்டு வைத்தது போலாகி விடும் என்ற அச்சத்தில் பணத்தை பறிகொடுத்த சில வியாபாரிகள் மவுனம் காத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்தடுத்து ஜேப்படி சம்பவத்தில் ஈடுபடும் வெள்ளைக்கார களவானிகள் அடுத்ததாக திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று கைவரிசை காட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அங்குள்ள வியாபாரிகளாவது விழிப்புடன் இருந்து தப்பிப்பார்களா அல்லது வெள்ளைக்கார களவானிகளிடம் பணத்தை பறிகொடுப்பார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்திற்குள் நுழைந்து கைவரிசை காட்டிவரும் இந்த வெள்ளைகார ஜேப்படி ஜோடி எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை அவர்களின் புகைப்படம் மூலம் குடியுரிமை அதிகாரிகள் துணை கொண்டு துப்பு துலக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தமிழகம் முழுவதும் இந்த வெள்ளைக்கார கொள்ளையர்களின் புகைபடத்தை கடைகள் தோறும் ஒட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments