இடி மின்னலுடன் கொட்டிய மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்

0 554

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் அதிகாலைக்கும் பிறகும் கனமழை நீடித்தது. இடி மின்னலுடன் கொட்டிய கனமழையால் சென்னை நகர முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது- ஏழு மணிக்கு பிறகு கனமழை ஓய்ந்து சாரல் மழையாகத் தொடர்ந்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், வடபழனி, வளசரவாக்கம், கோடம்பாகம் நுங்கம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. 

இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். எனினும் காலாண்டுத் தேர்வு நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால் சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை இதனால் கரையோரத்தில் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மழை காரணமாக பட்டினப்பாக்கத்தில் மீன் விற்பனையும் நடைபெறவில்லை என்பதால் வெறிச்சோடிக் காணப்பட்டது.

சென்னை

சென்னையில் பெய்த கனமழை காரணமாக இடி தாக்கியதில் சுவர் விழுந்து, பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில் வசித்து வருபவர் செரினா, 42 வயதான இவரது கணவர் நவாஸ்கான், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து செரினா தனது 23 வயதான மகள் நஸ்ரின் பாத்திமா மற்றும் 14 வயதான லெனினுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வரும் செரினா, நேற்று வேலை முடித்துவிட்டு வீடுதிரும்பி தனது குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் பலத்த இடி தாக்கியதில் செரினாவின் வீட்டு ஓடுகள் சரிய தொடங்கியிருக்கிறது. சத்தம் கேட்ட, செரினாவின் மகன், மகள் மற்றும் தாயார் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்துள்ளனர். செரினா சுதாரித்து வெளியே வருவதற்குள் ஓடுகள் மொத்தமும் சரிந்து, சுவர் இடிந்துள்ளது.

இதில் சிக்கிய செரினா, மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் செரினாவை சடலமாக மீட்டனர். தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், செரினாவின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் , நேற்று இரவு முதல் இடியுடன் பெய்த கனமழையால் சென்னை சுற்றுவட்டாரங்களான மாதவரம், மணலி, பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொளத்தூர், புழல், செங்குன்றத்தில்  பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

image

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காந்திசாலை, செவிலிமேடு, வாலாஜாபாத், ஒரகடம், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களில் சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்ப வாய்ப்புள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

திருவள்ளூர் 

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருத்தணியை அடுத்த ஜாகீர் மங்கலம் கிராமத்தில் ஏரி நிரம்பியதால் பெருக்கெடுத்த வெள்ள நீரில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினர். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். திருவள்ளூரில் கடந்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

தஞ்சை 

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க தாமதமானதால், தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிட்ட நிலையில், ஆழ்துளை கிணறு மூலம் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி தொடங்கப்பட்டது.

இதனிடையே அம்மையாகரம், வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கதிர்கள் நன்கு விளைந்து பால்விட்டு இன்னும் 10 நாளில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தற்போது தொடர் மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன. தொடர்ந்து கதிர்கள் நீரில் மிதப்பதால் கருக்காவாகவும், முளைக்கும் நிலையிலும் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் மழை நீர் வடிய வழியில்லாமல் விளை நிலங்களில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதியை சேர்ந்த 16 மீனவ கிராம மீனவர்கள் மீன்படிக்க கடலுக்குள் இன்று செல்லவில்லை. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இதனால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படியே நேற்று மாலை முதலே புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், வைத்திகுப்பம், வீராம்பட்டினம், நல்லவாடு உள்ளிட்ட 16 கிராம மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட மோட்டார் மற்றும் விசைப்படகுகள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இறங்க கூடாது என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

சென்னை சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், பனையூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் சுற்று வட்டாரங்களில் கன மழை பெய்து வருகிறது. ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த சோழிங்கநல்லூர் பிரதான சாலையில் 5 கிலோமீட்டருக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழையாலும், சாலை சேதம் மற்றும் பள்ளங்களாலும் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். அவசர ஊர்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை நிலவுகிறது.

கனமழை காரணமாக ஆவடி பருத்திப்பட்டு ஏரியிலிருந்து தண்ணீர் சாலையில் செல்வதால், பூந்தமல்லி - ஆவடி சாலையில் சுமார் 2 அடிக்கு ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 33 தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் குப்பைகள், அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூர் கொரட்டூர் ஏரி சுற்றுவட்டாரங்களான டி.டி.பி. காலனி மேனாம்பேடு, கள்ளிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்த்த மழையில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தெருக்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளையும் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரின் வேகத்தில் சாய்ந்தன. மழை வெள்ளத்தால் வாகனங்கள் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

கனமழை காரணமாக கோயம்பேடு சாலை மற்றும் வணிக வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ள நிலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதியுற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதிகளில் பெய்த மழையால் கொடுமுடியாறு அணை நிரம்பியது. அதேபோன்று நம்பிகோவில் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் மலையடிபுதூர், மாவடி, கட்டளை, ஆகிய குளங்களும் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக  பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments