பிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..!

0 731

69 வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும் சிறப்புகளை இந்த செய்தி...

1950ம் ஆண்டில் ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி தமது தந்தைக்கு உதவியாக தேநீர் விற்பவராக தமது வாழ்க்கையை தொடங்கினார். தமது எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்த அவர் இளமைக் காலத்தில் பல்வேறு ஆசிரமங்களில் ஆன்மீக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றார். பின்னர் இமய மலைக்கும் அவர் சென்று தியானம் பயின்றார்.பள்ளிப் படிப்பை முடித்ததும் தமது திருமண வாழ்வையும் துறந்த அவர், பல்வேறு கோவில்களை நாடி யாத்திரை மேற்கொண்டார்.

1985 ஆம் ஆண்டுஆர்.எஸ்.எஸ் மூலம் பாஜகவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பல்வேறு பொறுப்புகளை கட்சியில் வகித்து வந்த மோடி2001ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாயால் குஜராத் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மதக்கலவரங்களை சரியான முறையில் கையாள முதலமைச்சராக இருந்த மோடி தவறி விட்டதாக கடும் சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து அதன் அடிப்படையில் மோடி மீதான எந்தவித குற்றச்சாட்டுக்கும் அடிப்படையில்லை என்று தீர்ப்பை வெளியிட்டது. மோடியின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் குஜராத் அபரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டியது. இது தேசிய அளவில் மோடியின் செல்வாக்கை உயர்த்த உதவியது.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை பாஜக அடைய மோடியின் செல்வாக்கு உதவியது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் மோடி தலைமையிலான பாஜக முன்பை விட கூடுதலான பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

காங்கிரஸ் கட்சியில் இல்லாத ஒரு தலைவர் மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டுமுறை பெரும்பான்மை பலத்துடன் மகத்தான வெற்றி பெற்ற புதிய வரலாற்றையும் மோடிதான் உருவாக்கினார். தமது முந்தைய ஆட்சியிலும் 100 நாட்களை கடந்துவிட்ட புதிய ஆட்சியிலும் பல அதிரடித் திட்டங்களை அறிவித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

கள்ளநோட்டுகளை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்கும் நடவடிக்கை, தொடர்ந்த பல வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்கு முதலீடுகளை கொண்டு வந்தது, சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தியதும் மோடியின் சாதனைதான்.

80 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, அனைத்து கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, சிறுவியாபாரிகள், அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதி திட்டம், ஜிஎஸ்டியை அமல்படுத்தி நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது என மோடியின் பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

தீவிரவாதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இரும்புக் கரம் கொண்டு பதிலடி கொடுக்கும் இந்தியா சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் புதிய பலம் பெற்றுள்ளது. துல்லியத் தாக்குதல்களும், வான் தாக்குதல்களும் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களை குலை நடுங்கச் செய்துள்ளன.

ஜம்மு காஷ்மீரின் 70 ஆண்டுக்கால பிரச்சினைக்கும் மோடி அரசு துணிவுடன் தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து ஊரடங்கை அமல்படுத்தியும் காஷ்மீர் தலைவர்களை தடுப்புக்காவலில் வைத்தும் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கை சர்ச்சையை கிளப்பிய போதும் காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டு இது இந்தியாவின் உள்விவகாரம் என்று பாகிஸ்தானை காஷ்மீர் விவகாரத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாக மாறியுள்ளது.

மடிப்புகள், கசங்கல்கள் இல்லாத சுத்தமான நல்ல ஆடைகளை அணியும் பழக்கத்தை சிறுவயது முதலே மேற்கொண்டவர் மோடி. இன்றும் அவர் அணியும் ஆடைகள் மக்களின் கவனத்தைக் கவர்கின்றன.

பாஜகவினர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வாரம் முழுவதும் சேவை வாரமாக கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளனர். பல்வேறு சமூக நலப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோடியின் சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகளும் மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே மோடியின் அபிமானி ஒருவர் வாரணாசியில் உள்ள அனுமன் கோவிலில் நெய் காணிக்கை செலுத்தி பிரதமர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டிக் கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments