பெண் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

0 1850

சென்னையில், லேன்சன் டொயொட்டா கார் ஷோரூம் நிறுவனத்தின் பெண் இணை இயக்குநரான ரீட்டா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கார் விற்பனை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் போது கணவன் - மனைவி இடையே நடந்த சண்டையே ரீட்டாவின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரத்தைச் சேர்ந்த லங்காலிங்கம் என்பவரால் 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் லேன்சன் டொயொட்டா. டொயொட்டா கார்களை விற்பனை செய்யும் டீலர் நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. 60,000 வாடிக்கையாளர்களைக் கொண்ட அந்நிறுவனத்திற்கு சென்னையில் கோயம்பேடு மற்றும் தேனாம்பேட்டையில் ஷோ ரூம்கள் உள்ளன.

லங்கா லிங்கத்தின் மனைவியான ரீட்டா, லேன்சன் டொயொட்டா ஷோரூம் நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்தார். நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் அவர்களது வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வெகுநேரமாகியும் ரீட்டா தனது அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

வீட்டின் மேற்பார்வையாளராக இருக்கும் ஏசுபாதம் என்பவர், காலை 9 மணி அளவில் ஜன்னல் வழியாக பார்த்த போது, ரீட்டா தனது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்து நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், ரீட்டாவின் சடலத்தை மீட்டனர். அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரீட்டா தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கணவன் மனைவி இடையே தொழில் ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடே ரீட்டாவின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

லங்கா லிங்கத்திற்கும் ரீட்டாவுக்கும் இடையே கடந்த ஒரு வாரகாலமாகவே மனக்கசப்பு இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக லங்கா லிங்கம் வீட்டிற்குச் செல்லாமல், எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியிலேயே தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

புதன் கிழமை அன்று, லேன்சன் டொயொட்டாவின் கார்ப்போரேட் அலுவலகமான தேனாம்பேட்டை ஷோ ரூமில் விற்பனைப் பிரிவு நிர்வாகிகள், மேலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கார் விற்பனை தொடர்பாக மேலாளர்கள், மற்றும் விற்பனை பிரிவு நிர்வாகிகளை ரீட்டா கடிந்து கொண்டதாகவும், அப்போது லங்கா லிங்கம் மனைவியைத் திட்டியதாகவும் கூறப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் முடிந்த பின்னர், இருவரும் ஒன்றாகவே வீடு திரும்பியதாகவும், ஆனால் வீட்டின் கதவை பூட்டிய ரீட்டா, தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்றதும், லங்கா லிங்கம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதாகவும் போலீசார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 2 மணி அளவில் வீட்டுக்குச் சென்ற லங்கா லிங்கம், கதவை தட்டிய போதும் திறக்கப்படாத நிலையில், ரீட்டா காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லங்காலிங்கம் - ரீட்டா தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதாகவும், மகன் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments