ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் மோதி விபத்து

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் பலியானான்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அல்வார் அருகே திஜாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி முடிந்து பெஹ்ரோர் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள மோகன் பாகவத்தின் காருடன், மேலும் 8 முதல் 10 கார்களும் அணிவகுத்து சென்றுள்ளன. அப்போது மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் தனது தாத்தாவுடன் பயணித்த 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். அவனது தாத்தாவும் படுகாயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய காரின் பதிவெண்ணை வைத்து அதன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள ராஜஸ்தான் போலீசார், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் மஹாராஷ்டிராவில் மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் ஒன்று, சாலையின் குறுக்கே வந்த பசுமாட்டை காப்பாற்றுவதற்காக திருப்பிவிடப்பட்டு, பாதுகாப்பு பணியிலிருந்த வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Comments