கால்நடைகளுக்கான திட்டங்கள்.. மதுராவில் பிரதமர் மோடி

0 444

தேசிய அளவிலான கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிளாஸ்டிக் சேகரிக்கும் பெண்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு உதவி செய்தார்.

கோமாரி மற்றும் புரூசெல்லா நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டு தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் தொடக்க விழா, உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, ஹெலிகாப்டர் மூலம் மதுரா சென்ற பிரதமர் நரேந்திரமோடியை, உத்தரப்பிரதேச  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளைப் பார்வையிட்டார். நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், அதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் குறித்தும், கால்நடை மருத்துவர்களிடம் கலந்துரையாடினார். 

விழா நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தையும் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதை ஒட்டி, அந்த வகை பிளாஸ்டிக்குகளைச் சேகரிக்கும் பெண் ஊழியர்களை மோடி சந்தித்தார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அப்பெண்கள் ஈடுபட்டிருந்த போது, அவர்களுக்கு பிரதமர் மோடி உதவினார்.

இதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தின் இயக்கத்தை மோடி தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமாமாலினியும் கலந்து கொண்டுள்ளார். 

புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, உலகிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதம், பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றி இருப்பதாக சாடினார். அமெரிக்காவில் இதேநாளில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலை நினைவு கூர்ந்த அவர், எந்த நாட்டின் எல்லையையும் கடந்து செல்லும் அளவுக்கு கட்டுப்படுத்த முடியாத சித்தாந்தமாக தீவிரவாதம் மாறி விட்டது என்றார்.

தீவிரவாதத்திற்கு எதிராக துணிச்சலான சில நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டதாகத் தெரிவித்த மோடி, இனியும் அது தொடரும் என்று உறுதி அளித்தார். உலகத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுக்கும் அண்டை நாட்டை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று சூளுரைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments