மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை -பிரதமர் மோடி

0 896

ழல், மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், சொந்த பந்தங்களுக்கு உயர் பதவி அளித்தல் ஆகியவற்றுக்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நாட்டில் நாளை அவருக்கு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்படுகிறது. 

பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். இதில் முதற்கட்டமாக பிரான்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன், பிரதமர் எடோவர்ட் பிலிப் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

தலைவர்கள் இருவரும் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே திறன் மேம்பாடு, சூரிய ஒளி மின்னுற்பத்தி, மின்னணு தகவல் தொழில்நுட்பம், கடல் சார் தகவல் பரிமாற்றம் ஆகியவை சார்ந்த நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த 1950 ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு 40 பயணிகள் மூன்று ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலையால் பிரான்ஸ் நாட்டின் பிளான்ங் மலையில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.

இதே போன்று 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி மும்பையில் இருந்து நியூயார்க் நகருக்கு பிரான்ஸ் வழியாக 106 பயணிகள், 11 ஊழியர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம், ஆல்ப்ஸ் மலையில், மோசமான வானிலையால் மோதி நொறுங்கியது.

இந்திய அணு சக்தி கமிஷன் தலைவர் ஹோமி பாபா உள்ளிட்ட 106 பயணிகள், மற்றும் 11 ஊழியர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.இந்த இரு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக பாரிஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை மோடி திறந்து வைத்தார்.

இதன் பின்னர் பாரிசில் உள்ள யுனஸ்கோ தலைமை அலுவலக கருத்தரங்கத்திற்கு சென்ற அவர், அங்கு பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.பிரதமரை கண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் மோடி, மோடி என எழுப்பிய முழக்கத்தால் அரங்கமே அதிர்ந்தது.

பின்னர் கூட்டத்தில் பேசிய மோடி, 21 ஆம் நூற்றாண்டில் உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அனைவருமே பேசுகிறார்கள் என்றார்.

உள்கட்டமைப்பை குறிக்கும் இன்பிரா என்ற வார்த்தையில் உள்ள இன் இந்தியாவையும், பிரா என்பது பிரான்சை குறிக்குமென தாம் கருதுவதாக அவர் கூறினார். சூரிய ஒளி இன்பிரா, சமூக இன்பிரா, தொழில் நுட்ப இன்பிரா, டிஜிட்டல் இன்பிரா, பாதுகாப்பு இன்பிரா என அனைத்திலும் இந்தியாவும், பிரான்சும் ஒன்றிணைந்து செயல்படுவதாக மோடி கூறினார்.

பாரிசின் கலாச்சார விழாக்களுக்கான பட்டியலில் விநாயகர் சதுர்த்தியும் இடம் பிடித்துள்ளதாக கூறிய அவர், அடுத்த சில நாட்களில் பாரிசில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களை கட்டும் என்றார். அப்போது பாரிசே குட்டி இந்தியாவாக மாறும் என்று அவர், கணபதி பாபா மோரியா என்ற முழக்கம் பாரிசிலும் இனி ஒலிக்குமென்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரான்சும் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக கூறிய மோடி, பயங்கரவாத எதிர்ப்பிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்றார்.

நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநடத்தி சென்றதால் தான், மீண்டும் ஆட்சி அமைக்க இந்திய மக்கள் உரிமை தந்துள்ளதாக அவர் கூறினார். 21 ஆம் நூற்றண்டை வழிநடத்தும் வல்லமையுடன் புதிய இந்தியா திகழ்வதாக கூறிய அவர், வர்த்தகத்திற்கு உரிய நாடாக, வாழ்வதற்கு உரிய நாடாக புதிய இந்தியா உருவெடுத்துள்ளது என்றார்.

கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டை பாதித்த பல பிரச்சனைகளுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஊழல், குடும்ப ஆட்சி, உறவினர்களுக்கு உயர் பதவி அளித்தல், மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றார்.

பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அந்நாட்டில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவருக்கு, அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சையத் வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments