தூய்மையாகும் சென்னையின் 3 ஆறுகள்..!

0 1617

சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை சுத்தப்படுத்தவும், அதில் விடப்படும் கழிவுநீரை, சுத்திகரிக்கவும், 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு தொடங்கும், முதற்கட்ட பணிகளுக்காக ஆயிரத்தோரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் உள்ள, அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று ஆறுகளில், நாளொன்றுக்கு 17 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுகிறது.

இவ்வாறு விடப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தடுத்து, அதனை சுத்திகரிக்கும் வகையிலும், அடையாறு மற்றும் கூவம் ஆறுகள், பக்கிங்காம் கால்வாய் ஆகியனவற்றை சுத்தப்படுத்தும் விதமாகவும், புதிய மறுசீரமைப்பு திட்டம், சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் ஆகியவை மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தயாரித்து அளித்த விரிவான திட்ட அறிக்கையை ஏற்று, 2 ஆயிரத்து 371 கோடி ரூபாயை, தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்ட பணிகளுக்காக, ஆயிரத்தொரு கோடி ரூபாயும், இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஆயிரத்து 370 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள், இந்தாண்டு தொடங்கி, 2022ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments