எம்மொழியும் “எம் மொழியே” : அழகு தமிழில் பேசி அசத்தும் வடமாநில மாணவர்கள்..!

0 341

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நடுநிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் வடமாநில சிறுவர் சிறுமியர் இந்தி, ஆங்கிலத்துடன் அழகு தமிழில் பேசி அசத்துகின்றனர். 

சிறுபுழல்பேட்டையில் இயங்கி வரும் இந்த நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 107 மாணவர்கள் அசாம், பீகார், ஒடிஷா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கும்மிடிப்பூண்டியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இந்த மாணவர்களின் பெற்றோர் பணிபுரிந்து வரும் நிலையில் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் இவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு என 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளையும் ஆசிரியர்கள் அக்கறையுடன் கற்றுக்கொடுக்க, ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர் மாணவர்கள். இங்கு பயிலும் வடமாநில மாணவர்கள் கொஞ்சும் தமிழில் திருக்குறள் சொல்வது அத்தனை அழகாக உள்ளது.

இந்த மாணவர்களுக்கு உத்தரப்பிரேதசத்தில் இருந்து புத்தகங்கள் வரழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து, சீருடை, மதிய உணவு உள்ளிட்ட பல வசதிகளும் இவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள், பெற்றோரின் பணிச்சூழல் காரணமாக இங்கு வந்தால், அங்கு படித்த பள்ளியின் மாற்றுச்சான்றிதழைக் கொண்டு இந்தப் பள்ளியில் சேர்ந்துகொள்ளும் வசதி உள்ளது. அதேபோல், இங்கு பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்குச் சென்றால் இந்தப் பள்ளியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழை அங்குள்ள பள்ளியில் கொடுத்து படிப்பைத் தொடரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

வெவ்வேறு மொழி பேசும் மக்கள் வேலைக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போதும், அவர்களது குழந்தைகளின் கல்வி தடைபடாமல் தொடர்வதற்கு இது போன்ற பள்ளிகள் அவசியம் என்கின்றனர் கல்வியாளர்கள்...

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments