காரில் “வழக்கறிஞர்” ஸ்டிக்கர் ஒட்டி கஞ்சா கடத்தல்

0 999

சென்னையில் வாடகைக்கு காரை எடுத்து, அதில் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்திச் சென்ற உடன் பிறந்த சகோதரர்களை உளுந்தூர்பேட்டை அருகே போலீசார் மடக்கிக் கைது செய்தனர். ஜி.பி.எஸ் கருவி மூலம் போலீசிடம் சிக்கிய கடத்தல்காரர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

திண்டுக்கல்லைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்களான மணி, பிரபு ஆகிய அவர்கள் இருவரும் சென்னையிலுள்ள டிராவல்ஸ் ஒன்றில் ஸ்விஃப்ட் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். சென்னைக்குள்தான் வேலை என்றும் மதியத்துக்குள் காரை கொண்டு வந்து விட்டுவிடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இருவரிடமுமே முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் முகவரிச் சான்றுகள் இருந்ததால் குறிப்பிட்ட வைப்புத் தொகையை பெற்றுக்கொண்டு நிறுவனத்தினர் காரை அவர்களிடம் கொடுத்துள்ளனர்.

சென்னைக்குள் வேலை என்று கூறிய இருவரும் காரை எடுத்துக்கொண்டு ஆந்திரா நோக்கிச் சென்றது, அதில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் நிறுவனத்தாருக்குத் தெரியவந்தது. ஆந்திரா சென்று மீண்டும் சென்னை திரும்பிய சகோதரர்கள், சொன்னபடி காரை நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணத்தை தொடர்ந்துள்ளனர். இதனால் காரில் ஏதாவது கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தில் வாடகைக் கார் நிறுவனத்தார், மாநகர காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

உஷாரான மாநகரக் காவல்துறை, செங்கல்பட்டு, விழுப்புரம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். காரின் திசையை ஜி.பி.எஸ் மூலம் கண்காணித்தவாரே அடுத்தடுத்த காவல்நிலையங்களுக்குத் தகவல் பறந்தது. இறுதியாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் சகோதரர்கள் இருவரும் சிக்கினர். காரின் பின்பகுதியில் மறைத்துவைத்து கடத்தப்பட்ட 120 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர போலீஸோ, தமிழக போலீஸோ காரை சோதனை செய்ய முயற்சிக்கக் கூடாது என்பதற்காக முகப்புக் கண்ணாடியில் வழக்கறிஞர் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டி அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments