பிரதமர் மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேச்சுவார்த்தை

0 396

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஒசாகா நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பேச்சு நடத்தினார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில், இரு நாட்களுக்கு ஜி-20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு, ஒசாகா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடியை, ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர். பின்னர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் அப்போது பரஸ்பரம் வரவேற்பு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் தமக்கு முதன் முதலில் ஷின்சோ அபே வாழ்த்துக் கூறியதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் இந்தியா வரஉள்ளதை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக, வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். நாட்டைவிட்டு தப்பி ஓடும் பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்த பிரச்சனையை பிரதமர் மோடி முந்தைய ஜி-20 மாநாடுகளில் எழுப்பியதை சுட்டிக்காட்டிய ஷின்சோ அபே, ஊழல்தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்பிரச்சனையை கையாள வேண்டும் என்றார்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் குறித்தும், இரு நாடுகளின் நட்பின் அடையாளமாக வாரணாசியில் கட்டப்பட உள்ள மாநாட்டு அரங்கம் திட்டம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

உலக வர்த்தகம், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்தும் மோடியும் அபேவும் ஆலோசனை நடத்தினர். நாளை நடைபெறும், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தையில், மீண்டும் இரு பிரதமர்களும் சந்தித்துப் பேச உள்ளதாக, வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார். சீன, ரஷ்ய அதிபர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments