அரசு மருத்துவமனை ஜெனரேட்டர் பழுது 5 பேர் உயிரிழப்பு...! மெத்தனத்தால் அவலம்

0 1027

துரையில் பலத்த காற்று மற்றும் மழையால் நேற்று மின் தடை ஏற்பட்ட  நிலையில், அங்குள்ள ஜெனரேட்டர் இயங்காததால் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் செயல் இழந்து மூச்சுத் திணறலால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய் கிழமை மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதில் மதுரை அரசு மருத்துவமனையும் இருளில் மூழ்கியது. அங்குள்ள ஜெனரேட்டர் போதிய பராமரிப்பு இல்லாததால் அதுவும் இயங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் செயல் இழந்தது. வெண்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்த நோயாளிகள் பலருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது.

இதனால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்ட 5 பேர் அடுத்தடுத்து மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 மணி நேரத்திற்கு பின்னர் யூபிஎஸ் பேட்டரிகள் கொண்டு வந்து வெண்டிலேட்டரை செயல்பட வைத்ததால் மீதம் உள்ள நோயாளிகள் காப்பாற்றபட்டதாக கூறப்படுகின்றது.

வென்டிலேட்டர் இயங்காத காரணத்தினால் 5 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ள நிலையில் தாங்கள் பேட்டரியை இயக்கி வென்டிலேட்டரை சீரமைத்ததாகத் தெரிவித்த மருத்துவமனை டீன் வனிதா, சுவாசக் கருவி இயங்காமல் போனதால், யாரும் உயிரிழக்கவில்லை என்றும், வேறு மருத்துவமனைகளில் இருந்து ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டவர்கள் நோயின் தன்மையால் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்

5 பேர் உயிரிழப்புகளுக்கு நோய் தான் காரணம் என்று டீன் வனிதா விளக்கம் கொடுத்தாலும், பேட்டரி மூலம் வெண்டிலேட்டர் இயக்கப்பட்டதாக அவர் அளித்துள்ள விளக்கத்தின் மூலமே இந்த உயிரிழப்புகளுக்கு ஜெனெரேட்டர் உடனடியாக இயக்கப்படாததே முக்கிய காரணம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மின் தடை ஏற்பட்டால் அவசர காலத்தில் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கும் அதனை பராமரிப்பதற்கும் என்று பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மருத்துவ மனைக்கும் தனி தனி குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஜெனரேட்டர்களை பராமரித்து இயங்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவர்களின் பணி. ஆனால் மதுரையில் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் கடந்த 1 வருடமாக இயக்கப்படாமல் கிடப்பில் போட்டதால், வெண்டிலேட்டர்கள் செயல் இழந்து போனதாக கூறப்படுகின்றது.

ஆண்டுக்கு ஒரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் பராமரிப்பு மற்றும் டீசல் செலவுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் ஜெனரேட்டர் பராமரிப்பில் மெத்தனம் காட்டியதோடு, 5பேர் உயிரிழப்புக்கு காரணமான பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments