சேவையை துஷ்பிரயோகம் செய்யும் கணக்குகள் தடை செய்யப்படும்... இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ் ஆப் எச்சரிக்கை

0 794

இந்திய அரசியல் கட்சிகள், வாட்ஸ்ஆப்பை தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள அந்நிறுவனம், தங்கள் சேவையை துஷ்பிரயோகம் செய்யும் கணக்குகள் தடை செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை முறைகேடாக அணுகி, அதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக தலையிட்டதாக புகார்கள் கூறப்பட்டன. மேலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடுகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தேர்தல் செயல்பாடுகளில் முறைகேடான வழிகளில் தலையிட்டு செல்வாக்கு செலுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தள நிறுவனங்களை மத்திய அரசு ஏற்கெனவே எச்சரித்திருந்தது. மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சமூகவலைத் தளங்களில் சட்டவிரோத உள்ளடக்கங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் சேவையை அதன் நோக்களுக்கு மாறான வகையில், பல அரசியல் கட்சிகள் பயன்படுத்த முயற்சிப்பதாக, வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தகவல் தொடர்பு தலைமை அதிகாரி கார்ல் வூக் ((Carl Woog)) கூறியுள்ளார். வாட்ஸ்ஆப் தொடர்பாக அரசியல் கட்சிகளை குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கார்ல் வூக், துஷ்பிரயோகம் செய்வோருக்கு சேவையை துண்டிக்க நேரிடும் என்பதே, தங்களது உறுதியான நிலைப்பாடு என  தெரிவித்துள்ளார்.

தேர்தலை மனதில் கொண்டு பார்க்கும்போது வாட்ஸ்ஆப் சேவை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அதை அடையாளம் கண்டு தடுக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கார்ல் வூக் குறிப்பிட்டுள்ளார். வாட்ஸ்ஆப் சேவையின் நோக்கத்தையும், எந்த நோக்கத்திற்காக வாட்ஸ்ஆப் கணக்கு வைத்திருந்தாலும் தவறாகப் பயன்படுத்துவது கண்டறிப்பட்டால் தானியங்கி மென்பொருள் மூலம் முடக்கப்படும் என்பதையும் அரசியல் கட்சிகளுக்கு விளக்க பல மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் தனிப்பட்ட உரையாடல்களுக்கான களமாக விளங்கும் வாட்ஸ்ஆப் சேவையில், பயனாளர்களின் அந்தரங்கம் பேணும் உரிமை வலுவாக பாதுகாக்கப்படும் என்றும், இதற்கு எதிராக திட்டமிடப்படும் விதிகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் கார்ல் வூக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments