தோழிக்கு செய்த துரோகம்.. பேராசையால் சிறை சென்ற தோழிகள்..!

0 2586

சிறிய முதலீட்டில் ஆரம்பித்த தொழிலில் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கவே, வெளியூருக்குச் சென்ற தொழில் கூட்டாளி தோழியின் கையெழுத்தை போலியாக போட்டு 3 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்த தோழிகள் சிறைக் கம்பிகளை எண்ணி வருவதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நம்பிய தோழியை ஏமாற்றி விட்டு சிறையில் கம்பி எண்ணி வரும் தோழிகள் சுதா, சத்தியபிரியா தான் இவர்கள்.

சென்னையைச் சேர்ந்த கார்த்திகையாயிணி, சுதா மற்றும் சத்தியபிரியா ஆகியோர் ஒரே பாராமெடிக்கல் நிறுவனத்தில் வேலைபார்த்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறியது. நெருங்கிய தோழிகளான மூன்று பேரும் சேர்ந்து புதிதாக தொழில் தொடங்க முடிவெடுத்தனர்.

2011-ம் ஆண்டு குரோம்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு வாடகைக்கு எடுத்து தங்களது பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு எஸ்.கே.எஸ். பயோ அனலிட்டிகல் ஆப் சிஸ்டம் என்ற பெயரில் நிறுவனம் துவங்கினர்.

லாப- நட்டத்தில் சமபங்கு என ஒப்பந்தம் செய்துக் கொண்டு, மெடிக்கல் சம்பந்தமான உபகரணங்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர் மூவரும். 2019ம் ஆண்டு இறுதியில் பணி நிமித்தமாக ஐதராபாத்தில் குடியேறினார் கார்த்திகையாயிணி.

அவ்வப்போது சென்னைக்கு வந்த கார்த்திகையாயிணியால் கொரோனா காலக்கடத்தில் வந்து செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் மருத்துவம் சார்ந்த உபகரணங்களின் தேவை அதிகமாக இருந்ததால் எஸ்.கே.எஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்து வந்துள்ளது.

அதிக லாபம் கிடைக்கவே, சென்னையில் இருக்கும் நாம் ஏன் ஐதராபாத்தில் இருப்பவருக்கு பங்கு தர வேண்டுமென முடிவெடுத்தனர் தோழிகள். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது போன்று நிறுவன வரவு-செலவுகளில் திருத்தம் செய்து அதனையே கார்த்திகையாயிணிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

கேட்கும் போதெல்லாம் கம்பெனி நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்ததால் சந்தேகமடைந்த கார்த்திகையாயிணி 2021ம் ஆண்டு நேரடியாக குரோம்பேட்டை வந்தார்.
ஆனால், அவர்கள் துவங்கிய நிறுவனம் அங்கு இல்லாததோடு, சேலையூர் பகுதிக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது.

தங்களது நிறுவனம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று கார்த்திகையாயிணி விசாரித்த போது, தோழிகள் இருவரும் கார்த்திகையாயிணியின் கையெழுத்தை போலியாகப் போட்டு பல லட்சம் பணத்தை எடுத்ததோடு, வேறொரு வங்கியில் புதியதாக கணக்கு துவங்கி அதில் வரவு-செலவு செய்து வருவதும் தெரிய வந்தது.

பல்வேறு வகைகளில் கடந்த 3 ஆண்டுகளில் மூன்று கோடியே அறுபது லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதை கண்டறிந்த கார்த்திகையாயிணி இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீஸார் சுதா மற்றும் சத்தியபிரியாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தோழியை ஏமாற்றியதில் கிடைத்த லாபத்தில் இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து பல இடங்களில் சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர் போலீஸார்.

தொழிலில் எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தாலும் நிர்வாகத்தில் முறையான கண்காணிப்பு இல்லையெனில் ஏமாற்றப்படுவது உறுதி என்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென தெரிவித்தனர் போலீஸார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments