குற்ற நகரங்களின் பட்டியல்! லண்டன், வாஷிங்டனை விட பாதுகாப்பான நகரம், சென்னை!!

0 2108

உலகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 18 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் 223-வது இடம் பிடித்திருக்கும் நம்ம சென்னை மாநகரம், லண்டன், வாஷிங்டன் டி.சி., பாரீஸ், பெர்லினை விட பாதுகாப்பான நகரம் என்று கூறியுள்ளது, அமெரிக்க ஆய்வு நிறுவனம்.

உலகளவில் உள்ள முன்னணி நகரங்களின் குற்றச் சம்பவங்கள் குறித்து அமெரிக்க இணைய நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே குற்றங்கள் அதிகளவில் நடக்கும் குற்றத் தலைநகரம் என்ற இடத்தை பிடித்துள்ளது, வெனிசுலா நாட்டின் தலைநகரம் கேரகஸ்.

குற்ற நகரங்கள் பட்டியலின் டாப் நூறு இடங்களில் 2 இந்திய நகரங்கள் வந்துள்ளன. ஒன்று, 76-வது இடத்தில் உள்ள டெல்லி. அதன் அருகே உள்ள உ.பி.யின் நொய்டா நகரம் 95-வது இடத்தில் உள்ளது. 

குற்ற நகரங்கள் பட்டியலில், டெல்லி அருகே உள்ள மற்றொரு நகரமான ஹரியானாவின் குருகிராம் 103-வது இடத்திலும், பெங்களூரு 115-வது இடத்திலும் உள்ளன.

பட்டியலின் 173-வது இடத்தில் உள்ள கொல்கத்தா, 184-வது இடத்தில் உள்ள மும்பை, 197-வது இடத்தில் உள்ள ஹைதராபாத் ஆகிய நகரங்களைக் காட்டிலும், 223-வது இடத்தில் உள்ள சென்னை மாநகரில் குறைவான அளவே குற்றங்கள் நடப்பதாக தெரிவித்துள்ளது, ஆய்வு நிறுவனம்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி., சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், நியூ யார்க், பிரிட்டன் தலைநகர் லண்டன், பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் முன்னணி நகரங்கள், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் போன்றவற்றை விட சென்னையில் குற்றங்கள் குறைவு என்கிறது இந்த ஆய்வு.

சென்னையை பொறுத்த வரை, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை விட அதிக பிரச்சினை என்றால், அது ஊழலும் லஞ்சமும் தான் என்பது ஆய்வில் கூறப்படும் தகவல்.

மறுபுறம், இந்தியாவில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடக்கும், மக்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் முதலில் வருவது, கர்நாடகாவின் மங்களூரு. இதற்கு அடுத்து குஜராத் மாநிலத்தின் வதோதரா, அகமதாபாத், ஜவுளி நகரம் சூரத் ஆகியவற்றுடன், கேரள தலைநகரம் திருவனந்தபுரமும் இடம் பெற்றுள்ளன.

உலகிலேயே குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடக்கும் ஊர் என்ற பெயரைப் பெற்றிருப்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஃஸ் அல்-கைமா என்கிறது, அமெரிக்க ஆய்வு நிறுவனம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments