செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

0 3855

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே செல்போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டே ஹெட் போனில் பாடல் கேட்ட பெண், செல்போன் வெடித்து பற்றிய தீயால் உடல் கருகி பலியான விபரீதம் நிகழ்ந்துள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் மற்றும் கடிகாரம் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல கடைக்கு வந்த கோகிலா, செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு, ஹெட்செட்டில் பாடல் கேட்டபடி தனது வேலைகளை கவனித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து தீ பற்றியதாகவும், கோகிலாவின் ஆடையில் தீப்பற்றியதால் கடையின் உள்ளே இருந்து வெளியே வர இயலாமல் தவித்த கோகிலா கூச்சலிட்டதாக கூறப்படுகின்றது.

அக்கம்பக்கத்தினர் வருவதற்குள்ளாக உடல் முழுவதும் தீ மளமளவென பரவியது. பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தாலும், கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவ இடத்தில் இருந்து கோகிலாவின் வெடித்த செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் சார்ஜரில் இணைத்தபடி செல்போன்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments