டூவீலர் திருடு போனால் இப்படியும் கண்டுபிடிக்கலாம்..! போலீசார் முன்வருவார்களா ?

0 3125

சென்னையில் களவாடப்பட்ட கே.டி.எம் பைக்கை ஒரு வருடம் கழித்து ஆந்திராவில் சர்வீஸுக்கு விட்ட போது உரிமையாளருக்கு வந்த குறுந்தகவலை வைத்து தமிழகத்தை சேர்ந்த ஆந்திர காவல் அதிகாரி ஒருவரின் உதவியால் ஒரே நாளில் பைக் மீட்கப்பட்டது.

சென்னை கொரட்டூரை சேர்ந்த பொறியாளர் காண்டீபன், கடந்த ஆண்டு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கே.டி.எம்.டியூக் 200 என்ற இவரது இரு சக்கரவாகனத்தை யாரோ மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டான்.

இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வண்டியை கண்டுபிடிக்க போலீசார் சிறு துரும்பைக்கூட தூக்கிப்போட முயற்சிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பாக காண்டீபன் வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் உங்கள் கேடிஎம் பைக் ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பைக் ஷோரூமில் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கான கட்டணம் செலுத்தியதற்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து களவுபோன பைக் ஆந்திராவில் இருப்பதை அறிந்து சிங்கப்பூரில் இருந்தே நண்பர்கள் மூலம் அதனை மீட்க முயற்சி மேற்கொண்டார் காண்டீபன், அனந்த் பூரில் உள்ள அந்த பைக் சர்வீஸ் மையத்துக்கு சென்று பைக்கை சர்வீசுக்கு விட்ட நபரின் செல்போன் நம்பரை பெற்று அவர் வைத்திருப்பது திருட்டு பைக் அதனை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அனந்த்பூர் எஸ்.பியான அன்புராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த ips அதிகாரியான அன்புராஜ் உத்தரவின் பேரில் ஒரே நாளில் அந்த கே.டி.எம் பைக் மீட்கப்பட்டது. கொரட்டூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக போடப்பட்ட எப்.ஐ.ஆர் தகவல்களை ஆந்திர போலீசார் கேட்ட போது , அவர்கள் சி.எஸ்.ஆர் கூட போடாதது தெரியவந்தது.!

இருந்தாலும் காண்டீபன் தான் அந்த இரு சக்கரவாகனத்தின் உரிமையாளர் என்பதை ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து பைக்கை காண்டீபனின் நண்பர்களிடம் எஸ்.பி அன்புராஜ் வழங்க உத்தரவிட்டார்.

திருடப்பட்ட வண்டியில் நம்பர் பிளேட் அகற்றப்பட்ட நிலையில் அந்த டூவிலர் சர்வீஸ் ஷோரூமில் என்ஜின் ஜேசிஸ் நம்பரின் அடிப்படையில் பில் போடப்பட்டதாகவும், அதனால் தான் அந்த பில் குறித்த குறுந்தகவல், பைக்கை வாங்கிய உரிமையாளரின் செல்போன் நம்பருக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அனைத்து டூவீலர் மெக்கானிக்குகளும் இதே போல என்ஜின் ஜேசிஸ் எண் யாருடைய பெயரில் உள்ளதோ அவரது செல்போனுக்கு பில் அனுப்பினால் திருடப்பட்ட வண்டிகள் எளிதாக சிக்கிக் கொள்ளும் என்கின்றனர் ஆந்திர காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments