விஜய் கிடையாது...! தளபதி தான்...!! போட்டாச்சு புது உத்தரவு

0 2804

நடிகர் விஜய்யை பார்க்கலாம் எனக்கூறி மாவட்ட நிர்வாகிகள் தங்களை சென்னைக்கு அழைத்து வந்ததாகவும், ஆனால், அவர் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் பெண் நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சுமார் 2 ஆயிரம் நிர்வாகிகள் வந்திருந்ததாக கூறப்படும் நிலையில், நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் சந்தனம்,குங்குமத்துடன் இனிப்பு வழங்கி வரவேற்றார் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

விஜயை காணலாம் என்ற ஆவலில் வெகுநேரமாக உட்காந்திருந்தும் கூட்டம் தொடங்காததால், சிலர் தூங்கி வழிய, மற்றவர்களோ வெட்கையை தாங்க முடியாமல் கைகளால் விசிறிய படி உட்காந்திருந்தனர்.

முறையான கழிப்பிட வசதி இல்லாததால் ஏராளமான பெண்கள் சிரமத்திற்கு உள்ளானதாகவும் அங்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஒருவழியாக கூட்டம் துவங்கியதும், கூட்டத்தில் விஜய் பங்கேற்க மாட்டார் என தெரிவித்த புஸ்ஸி ஆனந்த், இயக்கத்தை வலுப்படுத்துவது குறித்து பேசத் துவங்கினார்.

பிறகு நிர்வாகிகளுடனான கருத்துக் கேட்பின் போது, பெரும்பாலானவர்கள் தங்களுக்கு விஜயை தற்போது காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

எங்கள் குடும்பமே விஜய்யின் ரசிகர் தான் என ஒரு பெண் தெரிவிக்க, உடனே குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த் தலைவனை என்றுமே பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது என்றும் தளபதி என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வியை மற்ற நிர்வாகிகள் எழுப்பத் தொடங்கினர். என்னை சிக்கலில் மாட்டி விட வேண்டாம் எனத் தெரிவித்த புஸ்ஸி ஆனந்த், அதை தளபதி தான் சொல்வார் எனத் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மக்களோடு மக்களாக விஜய் பங்கேற்றதாகவும் கூட்டத்தில் தெரிவித்தார் புஸ்ஸி ஆனந்த்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments