பள்ளிக்கூட சண்டியருக்கு பாடம் எடுத்த போலீஸ்..! மறுப்பு தெரிவித்து வீடியோ..! இந்த அசிங்கம் தேவையா தம்பி..?

0 2329

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடங்காமல் பள்ளிக்கூடத்திற்குள் சண்டியர் போல இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அட்டகாசம் செய்த மாணவர் போலீசில் சிக்கியதால் பெற்றோருடன் நின்று மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பள்ளிக்கூடத்திற்குள் அமர்ந்து கெத்துக் காட்டுவதாக இன்ஸ்டா ரீல்ஸ் செய்ததால் போலீசில் சிக்கி மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அரசுப் பள்ளி மாணவர் இவர் தான்..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில், தன்னை ஒரு ரவுடி போன்று காட்டிக் கொள்ளும் வகையில் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் வசனங்களைக் கொண்டு வீடியோ பதிவு செய்திருந்தார்.

அதில் என்கவுண்டர் என்றாலும் அசரமாட்டோம் - எல்லா காவல் நிலையத்திலும் என்னைப் பற்றி கேட்டுப்பார் , செத்தாலும் துப்பாக்கியால் தான் சாக வேண்டும் என்ற வசனங்களுடன் அரிவாளை கையில் வைத்தவாறு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலான நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் விநாயகம் பசுவந்தனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி, மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் யோகேஸ்வரன் மேற்பார்வையில் பசுவந்தனை காவல் ஆய்வாளர் முத்துமணி, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவரையும் , அவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை வழங்கியது மட்டுமின்றி இனி இது போன்ற பதிவுகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் மாணவரிடமிருந்து அரிவாள் கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன், பெற்றோரின் பேச்சைக் கேட்பேன், கல்வி மட்டும் தான் தனக்கு முக்கியம் என்று தெரிவித்த பள்ளி மாணவர், காவல் நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்

அரிவாளுடன் அழிச்சாட்டியம் செய்த பள்ளி மாணவர் தற்போது அமைதியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments