மாணவனை விளாசிய ஆசிரியரை செருப்பால் அடித்து கும்மிய உறவினர்கள்..!

0 2703

மாணவனை அடித்து ஆபாசமாக பேசி காலில் விழவைத்த புகாருக்குள்ளான அரசு பள்ளி ஆசிரியரை, பள்ளிக்குள் புகுந்து மடக்கிப்பிடித்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செருப்பால் அடித்து சட்டையை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை செருப்பால் அடித்து உதைத்த பதை பதைக்கும் காட்சிகள் தான் இவை..!

திருவள்ளூர் மாவட்டம் , கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு திடீர் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு - செவ்வந்தி தம்பதியரின் மகன் ஹரிஹரன். இவர் குருவராஜகண்டிகை அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். திங்கட்கிழமை மதியம் பள்ளி வகுப்பறையில் தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு என்பவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது மாணவர் ஹரிஹரன் குறும்புத்தனம் செய்ய அவனை பிரம்பால் விளாசி எடுத்த ஆசிரியர் அவனை ஆபாசமாக பேசி காலில் விழ வைத்ததாக கூறப்படுகின்றது

மாணவன் ஹரிஹரனுக்கு, கை, கால்கள் வீங்கியதால் அவனை வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளியில் வைத்தே, ஒத்தடம் கொடுத்து இரவு 8 மணிக்கு பின்னர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. பள்ளியில் நடந்ததை ஹரிஹரனின் சகோதரி தங்கள் பகுதியில் சொன்னதையடுத்து ஆவேசமான பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தனர்

அந்த ஆசிரியருக்காக காத்திருந்த நிலையில் , அவர் நீண்ட நேரம் வராததால் ஆத்திரம் அடைந்தவர்கள் விளக்கம் அளிக்க வந்த ஆசிரியர் மோகன்பாபுவை மடக்கிப்பிடித்து அடித்து வெளியே இழுத்தனர்

சக ஆசிரியர்கள் அவரை காப்பாற்றி உள்ளே அழைத்துச்செல்ல முயல, விடாமல் கையில் செருப்பை எடுத்து அடித்து சட்டையை கிழித்து ஆசிரியர் மோகன்பாபுவை அடித்து நொறுக்கினர்

கிழிந்த சட்டையுடன் மீட்டு அழைத்துச்செல்லப்பட்ட ஆசிரியர் , தனக்கு நேர்ந்த அவமானத்தால் கதறி அழுத நிலையில் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பு புகாரின் பேரில் கும்பிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்

உறவினர்களை பள்ளிக்கு அழைத்துச்சென்று ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் தாய் மீது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு என்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments