மகளிர் உரிமைத் தொகைக்காக வீடு தேடி வரும் டோக்கன்..! மும்முரமாக விநியோகிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!!

0 1419

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. நியாய விலை கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று டோக்கன் வழங்கினர். டோக்கனில் முகாம் நடைபெறும் இடம் எது, எந்த நாள், வரவேண்டிய நேரம் முற்பகலா, பிற்பகலா என்பனவற்றை அவர்கள் குறித்து வழங்கினர்.

மதுரையில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. ரேஷன் அட்டை எண்ணை நிரப்பி டோக்கனுக்கான விண்ணப்பங்களை நியாய விலை கடை பணியாளர்கள் வழங்கினர்.

காஞ்சிபுரத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில், டோக்கன் விநியோகத்தின் போது எந்தவித முறைகேட்டிற்க்கும் இடம் தரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

திருநெல்வேலியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டுவிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

சேலத்தில் வீடு வீடாக விண்ணப்பம் வழங்கும் பணியை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விண்ணப்பம் விநியோகிக்கும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். மன்னார்குடி அருகே வள்ளூர் ஊராட்சியில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா டோக்கன் விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.

டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நியாய விலை கடைப் பணியாளர்கள் மூலமாக ஜூலை 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டந்தோறும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments