முகப்பு
“எல்லாம் தெரிஞ்சிடுச்சி உண்மையை ஒத்துக்கோ..” பெண்ணை பொலி போட்ட சம்பவம்..! கொலைக்கு காரணம் போலீசாரா ?
Jun 27, 2025 11:24 AM
219
கணவன் கையில் மனைவியின் கால் டீடெய்ல்..! மனைவியை கொன்று மது அருந்திய சம்பவம்
“இப்போக்கூட இன்னொரு சான்ஸ் தர்றேன்...நான் பண்ணினது தப்புதான்... கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன்...அப்படின்னு சொல்லு... இதையும் விட்டுடுறேன்... உன் கார் டிரைவர் பழனிசாமியை விட்டுறேன்...ஏய்...எல்லாம் கண்டுபிடிச்சுதாண்டி இந்த வேலையிலேயே இறங்கியிருக்கேன்”
“மிஞ்சு மிஞ்சுப் போனா எங்கடி போவான் அவன்? எங்க போய்டுவான்? கொண்ணுடமாட்டேன்?”
“மன்னிச்சுக்கோங்கன்னு கேளு வுட்டுடுறேண்டி பாப்பா... இல்லன்னா வுடமாட்டேன் பாப்பா...”
இது எல்லாம் மனைவியால் ஏமாற்றப்பட்ட ஒரு கணவனின் ஆதங்க வார்த்தைகள்...
“ஜனவரி 28 ஆம் தேதி, நீ ரிசைன் பண்ணியிருக்க. கேட்டா, பிப்ரவரி 28 ங்குற. ஜனவரி 2 ஆம் தேதியிலிருந்து நீ வேலைக்கே போகல. ஜனவரி மாசம் ரிசைன் பண்ணிட்டு வந்துட்ட... நீ ரெண்டு மாசமா வேலைக்கு போகவே இல்ல.
இப்படி அந்த கணவன் அடுத்தடுத்த ஆதாரத்தை எடுத்து வைக்க மிரண்டு போனார் அந்த மனைவி
நான் மொத்த ப்ரூஃபும் எடுத்துட்டேன். சொன்னா கேளு. பசங்க சத்தியமா சொல்றேன். உன் மேல சத்தியமா சொல்றேன். உண்மையா சொல்லி மெசேஜ் போட்டீன்னா நான் சைலண்டா இருப்பேன். யார்க்கிட்டேயும் எதுவும் பேசமாட்டேன்.
என்று மனைவியிடம் கெஞ்சிப்பார்த்தும் பிரயோசனம் மில்லை அடுத்து நடந்தது தான் அந்த கொடூரம்..
“எல்லாம் எல்லாருக்கும் தெரியும், உண்மைய ஒத்துக்கமாட்டதானே? நான் தான் அதையும் வந்து காட்டணுமாடி? உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”
என்று உருமியபடி கணவன் ஒருவர், தனது மனைவிக்கு மிரட்டலாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்கள் ஒவ்வொன்றும் மிரட்டல் ரகம்..!
வீட்டை விட்டு வெளியேறிய மனைவி...போலீஸில் புகார் அளித்த கணவன்... ஆதாரங்களை எடுத்துக் கொடுத்த போலீஸ்... அதற்குப்பிறகு நடந்த கொடூரக் கொலையின் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த, அங்கம்படி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான கவியரசுவிற்கும், உறவினர் பெண்ணான அதேப் பகுதியைச் சேர்ந்த ஜெயமோகனா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஓர் ஆண், ஒரு பெண் குழந்தை என பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில், கவியரசுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும், குடித்து விட்டு தினமும் மனைவியை ஆபாசமாக பேசி அடித்து, உதைப்பதுடன் சந்தேக டார்ச்சரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள, ஷூ கம்பெனிக்கு மனைவி ஜெயமோகனாவை வேலைக்கு அனுப்பிவிட்டு, ஏ.டி.எம் கார்டை வைத்துக்கொண்டு, டிரைவர் வேலைக்கும் செல்லாமல், கவியரசு பணத்தை எடுத்து குடித்து கும்மாளமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், வேலைக்குச் செல்லும்போது மனைவிக்கு தெரியாமல் ரகசியமாய் ஃபாலோ அப் செய்து அவர் யார், யாரிடம் பேசுகிறார் என கண்காணித்து, இரவு குடித்துவிட்டு வந்து, ‘எதற்காக அவனிடம் பேசினாய்? இவனிடம் பேசினாய்?’ எனக்கூறி பெற்ற குழந்தைகள் முன்பே ஆபாசமாக பேசி அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த ஜெயமோகனா கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து, கவியரசு தனது மனைவியை காணவில்லை எனக்கூறி மத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜெயமோகனா செல்போனில் கடந்த சில மாதங்களில் யார், யாரிடம் பேசினார்? என கால் லிஸ்ட் போட்டதுடன், டவர் லொகேஷனையும் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீஸார், ஆராய்ந்துள்ளனர். அப்போது, ஜெயமோகனா நாமக்கல்லில் இருப்பதை கண்டறிந்தனர்.
ஆனால், இதற்குப்பிறகு இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீஸார் செய்ததுதான், இந்த குற்றத்துக்கு முக்கிய காரணமாக மாறியது.
அதாவது, ஜெயமோகனாவின் கால் லிஸ்ட்டை எடுத்து “உன் மனைவி இங்கதான் இருக்கா... இவங்கக்கூடல்லாம் பேசியிருக்கா... இந்தா கால் டீடெய்ல்ஸ்” என கவியரசுவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், வாடகைக் காரில் எஸ்.ஐ. குட்டியப்பன் தலைமையிலான போலீசார், நாமக்கல் சென்று தோழியின் வீட்டில் இருந்த ஜெயமோகனாவை அழைத்து வந்து கொண்டிருந்தபோது, சேலம் அருகே லாரியின் மீது கார் மோதி, விபத்துக்குள்ளானது.
இதில், எஸ்.ஐ.குட்டியப்பனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது வரை விடுப்பில் உள்ளார். மேலும் ஒரு பெண் காவலர் மற்றும் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர், மத்தூர் காவல்நிலையத்தில் நடத்திய விசாரணையில் ஜெயமோகனா தனது கணவருடன் செல்ல விருப்பமில்லை என்று கூறியதையடுத்து, ஜெயமோகனாவின் தம்பியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அன்று முதல் தினமும் கவியரசு, ஜெயமோகனாவிற்கு கால் செய்து கால் டீடெய்ல்ஸ் என்னிடம் உள்ளது. நீ யார் யாரிடம் பேசினாய் என என்னிடம் ஆதாரம் உள்ளது எனக்கூறி டார்ச்சர் செய்துள்ளார். மேலும் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பி தினமும் மிரட்டி வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த ஜூன் 19 ஆம் தேதி ஜெயமோகனா இருந்த அவரது சகோதரரின் வீட்டிற்கு சென்ற கவியரசு மது போதையில், வீட்டின் கண்ணாடியை கல்லால் தாக்கி கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் ஜெயமோகனாவும் அவரது குடும்பத்தினரும் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரின் மீது இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தநிலையில், கெங்கிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள வெங்காயமண்டி பகுதியில் ஜெயமோகனாவை, கவியரசு கத்தியால் சரமாடியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தடுக்க வந்த உறவுக்கார பெண்ணான லதாவும் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
கொலை செய்து விட்டு சாவகாசமாக அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தவரை, சினிமா க்ளைமாக்ஸில் வரும் போலீஸ் போல் சென்று போலீஸார், கைது செய்தனர்.
இந்நிலையில், “கவியரசு வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலே இந்த சம்பவம் நடந்திருக்காது. எனவே, சந்தேக கணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெயமோகனா தரப்பு நியாயத்தை விசாரிக்காமலேயே, அவரது கால் டீடெய்ல்ஸ் உள்ளிட்ட விவரங்களை எடுத்ததோடு, அதை சம்பந்தப்பட்ட சந்தேகக் கணவனிடமோ கொடுத்து, அவரது படுகொலைக்கும் காரணமாக இருந்ததோடு, மனைவி குடும்பத்தார் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றத்தின் மேல் குற்றம் புரிந்த மத்தூர் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மீது கொலைக்கு தூண்டுதலாக இருந்த குற்றத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ஜெயமோகனாவின் குடும்பத்தினர் கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவில்லாமல் வாழ்ந்தால் பிரச்சனையில்லை, ஒருவர் மறைத்த ரகசியம் மற்றவருக்கு தெரிய வரும் போது நம்பிக்கை சீர்குலைந்து ஏற்படுகின்ற ஆத்திரத்தின் வெளிப்பாடு சூழ் நிலையை பொறுத்து விபரீத சம்பவங்கள் அரங்கேற தூண்டுதலாக அமைந்து விடுகின்றது.
ஆத்திரத்தில் செய்தாலும்.. ஆதங்கத்தில் செய்தாலும்.. குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu