அழிவின் விளிம்பில் பாம்பு இனங்கள்.. பாம்புகளை வாழவிடுவோம்..!

0 2828
அழிவின் விளிம்பில் பாம்பு இனங்கள்.. பாம்புகளை வாழவிடுவோம்..!

சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் பாம்பு இனங்கள் நாளுக்குநாள் அழிந்து வருகின்றன. உலக பாம்புகள் தினமான இன்று, பாம்புகள் ஏன் எதற்காக காப்பாற்றப்பட வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

மனிதர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை பாம்புகள். உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்பினங்கள் இருந்தாலும், இந்தியாவில் 300-க்கும் குறைவான பாம்பு இனங்களே உள்ளன. கடல், பாலைவனப் பாம்புகள் தவிர நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் என்ற 4 வகையான பாம்புகள் மட்டுமே மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை. முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாம்புகடியின் பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.

பெரும்பாலான பாம்புகளுக்கு விஷம் இல்லை என்பது நாம் அறிந்திராத செய்தி. தெய்வமாகக் கொண்டாடப்பட்டாலும் விஷம் என்ற ஒற்றைச் சொல்லால் அவை கொல்லப்படுகின்றன. அனைத்து உயிரினங்களையும் அடக்கி ஆள நினைக்கும் மனிதர்களால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பாம்புகள் இறந்து மடிகின்றன.

மனிதர்களின் பசி, பட்டினிக்கு எலிகள் முக்கியக் காரணமாக இருந்து வருகின்றன. இந்தியாவில் மட்டும் எலிகளால் ஆண்டுக்கு 3 மில்லியன் டன்கள் முதல் 26 மில்லியன் டன்கள் வரை உணவு தானிய இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலிகளைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரும் தடுப்பணையாக பாம்புகள் இருப்பதால், நாம் பசியின்றி வாழ, பாம்புகளும் வாழ்வது மிக அவசியம்.

சாரைப் பாம்பும், நல்ல பாம்பும் இணை சேர்ந்தன, நல்ல பாம்பு 100 ஆண்டுகள் வாழ்ந்தால் இச்சாதாரி நாகமாக மாறும், சாரைப் பாம்புக்கு வாலில் விஷம் உண்டு, பாம்பு புற்று கட்டும், பால் குடிக்கும், பாம்பை அடித்து விட்டு அது தப்பிச் சென்றால் மீண்டும் பழிவாங்கும், பாம்பின் தலையில் நாகரத்தினக் கல் உண்டு, மண்ணுளிப் பாம்பிலிருந்து ஆண்மைக்கு மருந்து எடுக்கப்படும்...என ஆண்டாண்டு காலமாக பாம்புகளைப் பற்றி நிலவிவரும் நம்பிக்கைகள் ஏராளம்.

மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளி வைத்து விட்டு, பாம்புகளையும் ஓர் உயிரினமாகப் பார்க்க வேண்டியது அவசியம். பூமியில் மனிதர்களைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் வாழ உரிமை உண்டு என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதானே....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments