சேலையோ... மார்டன் டிரெஸ்ஸோ... பொண்ணு தான் டார்க்கெட்... கேமரா ராட்சதர்கள்.. உஷார் ..! எச்சரிக்கும் சென்னை காவல்துறை..!

0 2946

சென்னையில் பொது இடங்களில் குடும்பப் பெண்களையும் , இளம் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்து வந்த பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தனது நண்பர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதனை பணம் செலுத்தி வாங்கி பார்த்தில், கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளிக்காக பிரபல ஷாப்பிங் மாலிற்கு சென்று துணி எடுத்த போது தனக்கு தெரியாமல் எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்ததாகக் கூறிஇருந்தார். விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆர்யா என்பவனை கைது செய்தனர்.

பி.டெக் ஐடி முடித்திருக்கும் ஆர்யாவிடம் நடத்திய விசாரணையில் அவனுடைய குரூர முகம் தெரியவந்தது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான துணிக்கடை, பிரபல மால்கள், திரையரங்குகள், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வலம் வரும் பெண்களின் அங்கங்களை குறிவைத்து வீடியோ எடுப்பதை ஆர்யா வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், அப்படி எடுக்கும் பெண்களின் புகைப்படத்தை ஆப் மூலமாக ஆபாசமாக சித்தரித்து, டெலிகிராம் மூலமாக ஆர்யா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

டெலிகிராமில் zip பைல் மூலமாக ஒரு புகைப்படத்தை பதிவேற்றி அதில் 40 புகைப்படங்களை வெவ்வேறு கோணங்களாக இருக்கும் வகையில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளான். முழு நிர்வாணமாக சித்தரித்த புகைப்படங்களை 100 ரூபாய் எனவும், வீடியோக்கள் 1000 ரூபாய் எனவும் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியாக பல டெலிகிராம் குழுக்களைத் தொடங்கி அதன் மூலமாக பொது இடங்களில் எடுக்கும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வந்துள்ளான் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 லட்சம் ரூபாய் வரை அவன் சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பெண்களின் ஆபாச புகைப்படங்கள் விற்பது மூலம் அதிகப்படியான தொகை வந்ததால், பின்னர் தானே டெலிகிராம் சேனலில் தனி குழு தொடங்கி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் ஆர்யா தெரிவித்துள்ளார். இதே போல தமிழகத்தில் இருந்து பல இளைஞர்கள் பொது இடங்களில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆர்யாவிற்கு அனுப்பி வருவதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமாக சம்பாதித்த பணத்தை விலை உயர்ந்த செல்போன், சுற்றுலா சொகுசு வாழ்க்கை என ஆர்யா வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்

ஆர்யாவிடமிருந்து செல்போன், மடிக்கணினி, வங்கிக் கணக்கு அட்டைகள் மற்றும் 3 ஆயிரத்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட 600 பெண்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆர்யாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2டிபி ஹார்டிஸ்குகளில் லட்சக்கணக்கான பெண்களின் புகைப்படங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆர்யாவிற்கு ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பும் நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஆர்யாவிடம் முதன்முதலில் புகைப்படங்களை எடுக்கக்கூறி வாங்கிய முக்கிய குற்றவாளியையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பெண்கள் பகிரும் பொழுது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் பெண்களை தவறாக புகைப்படம் எடுக்கும் நபர்களை கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அவசர எண் 100க்கோ தகவல் அளிக்குமாற சென்னை தெற்கு மண்டல சைபர் குற்ற பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments