ஹனிமூனில் நண்டு குழம்பு..விரும்பிச் சாப்பிட்ட தம்பதி..புதுப்பெண் மூச்சுத்திணறி பலி..! ஓட்டலில் நடந்தது என்ன ?

0 5693

கன்னியாகுமரி மாவட்டம்  சிற்றார் அணை கரையில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த கரூரை சேர்ந்த புதுமண தம்பதியினர் நண்டுக் குழம்பு வாங்கிச்சாப்பிட்ட நிலையில், புதுப்பெண் மூச்சுத்திணறி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் 25 வயதான தனது மனைவி கிருபா உடன் பல ஊர்களுக்கு ஹனிமூன் சென்று திரும்பிய நிலையில் குமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதியிலுள்ள சிற்றாருக்கு சென்றுள்ளனர். அங்குள்ள அணையின் கரையில் அமைந்துள்ள ரிசார்ட் ஓட்டல் ஒன்றில் செவ்வாய்கிழமை அறை எடுத்து தங்கி உள்ளனர் .

இந்நிலையில் விடுதியில் வழங்கபட்ட நண்டு உணவை தினேஷ்குமார் -கிருபா தம்பதியினர் விரும்பி சாப்பிட்டுள்ளனர். அப்போது தனது மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கணவர் தினேஷ்குமார் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கிருபாவை மீட்டு குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கிருபா உயிரிழந்தார் . தகவலறிந்த கடையாலுமூடு காவல்துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குபதிவு செய்து விடுதியில் வழங்கபட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவருக்கு சிறுவயதிலிருந்தே மூச்சு திணறல் பிரச்சனை இருந்தும் வந்ததாகவும், அதற்குரிய மருந்துகளை கையொடு அவர் எடுத்துச்சென்ற நிலையிலும் இந்த உயிரிழப்பு நேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் விடுதி மேலாளர் கூறுகையில் புதுமண தம்பதியர் மதியம் வேளையில், அவர்கள் தங்கி இருந்த அறைக்கு நண்டு உணவை கொண்டு வருமாறு ஆர்டர் செய்தனர்.

இளம் பெண் நண்டு குழம்பை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், கையில் கொண்டு வந்த மருந்துகளை உண்ட பின்பும் அவருக்கு மூச்சு திணறல் நிற்கவில்லை என்று இந்த பிரச்சனை ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பிறகு தான் கணவர் எங்களிடம் தகவலை தெரிவித்தார்.

உடனடியாக நாங்கள் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு வைத்து தான் சிகிச்சை பலனின்றி அந்தப்பெண் உயிரிழந்தார். சிகிச்சைக்கு தாமதமாக சென்றதும் அவர் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக ஓட்டல் மேலாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கிருபாவின் பெற்றோர் , தங்கள் மகளின் உயிரிழப்பு குறித்து பேச மறுத்து விட்ட நிலையில், கிருபாவுக்கு மூச்சிறைப்பு நோய் இருந்ததாகவும் அதற்காக அவர் மாத்திரை மருந்துகளை உட்கொண்டு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே கிருபாவின் உயிரிழப்புக்காண உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments