செந்தில்பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இரு வேறு மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மேகலாவின் மனு மீது அவரது தரப்பினரும், அமலாக்கத்துறையின் வழக்கறிஞரும் வாதங்களை நிறைவு செய்ததை அடுத்து, உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மூத்த நீதிபதி நிஷா பானு தமது தீர்ப்பை முதலில் படித்தார். அதில், செந்தில் பாலாஜியின் கைது சட்டத்திற்கு உட்பட்டு இல்லை என்றும் அதன் அடிப்படையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டதும் சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை என்றும் கூறினார். எனவே மேகலாவின் மனுவை ஏற்றுக் கொண்டு செந்தில் பாலாஜியை சட்டவிரோத காவலில் உள்ளதாகக் கருதி, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி பரத சக்கரவர்த்தி, மதுரையில் இருந்து காணொளி மூலம் தமது தீர்ப்பை படித்தார். நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பில் தான் மாறுபடுவதாகக் கூறி தமது உத்தரவை படிக்கத் துவங்கிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது, அதன் பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நடைமுறைகள் அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது தான் என்று தெரிவித்தார்.
இன்றில் இருந்து 10 நாட்களுக்கு மேல் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனையில் இருக்கக் கூடாது என்று கூறிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, அதற்குள் மருத்துவர்கள் டிஸ்சர்ஜ் செய்து விட்டால், செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.
அதே சமயம், மேற்கொண்டு சிகிச்சை தேவைப்பட்டால், செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிறை விதிகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவலில் இருந்த காலமாக கருத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இரு நீதிபதிகளுக்கும் இடையே இரு வேறு கருத்துகள் இருப்பதால் இந்த வழக்கு அடுத்த கட்டமாக 3-வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அந்த 3-வது நீதிபதி யார், அவர் எப்போது விசாரணை நடத்துவார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார்.
Comments