கலவர பூமியான காவல்நிலையம்.... பஞ்.தலைவரை பந்தாடிய கஞ்சா சப்ளை கும்பல்...!

கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் அளித்ததாக ஊராட்சிமன்றத் தலைவரை காவல் நிலையத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்கியதோடு, அங்கேயே இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மாமுண்டி பகுதியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையும், ரேஷன் அரிசி கடத்தலும் நடைபெற்று வருவதாக அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் கண்ணன், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு தனது ஆதரவாளர்களுடன் திங்கட்கிழமை இரவில் சென்றார்.
இந்த தகவல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக புகாரில் கூறப்படும் செந்தில் மற்றும் சத்யராஜ்க்கு தெரிய வரவே அவர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று ஊராட்சிமன்றத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், எங்களை பற்றி எப்படி நீ புகார் அளிக்கலாம்..? என்று கேட்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகின்றது
அப்போது, காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உள்பட 3 பேர் மட்டுமே இருந்ததால், அவர்களை முதலில் சமாதானம் செய்து வைக்க போலீஸார் முயற்சித்தனர். அதற்குள், இருதரப்பினருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கத் துவங்கினர்.
இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்குள்ளும் வளாகத்திற்குள்ளும் நடைபெற்றதால் போலீஸ் நிலையம் போர்க்களம் போல காட்சியளித்தது. தாக்குதல் குறித்து ஒரு போலீஸ்காரர் செல்போன் மூலமாக உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பெண் காவலரும், மற்றொரு காவலரும் சேர்ந்து சண்டையை விலக்கி விட முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதில், காவலர் ஒருவர் கீழே விழுந்து எழும் நிலைக்கு தள்ளப்பட்டார்
எனினும், கட்டுப்படாத கும்பல்களின் தாக்குதலில் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. 2 பேர் காவல் நிலைய வளாகத்திலேயே சுருண்டு விழுந்து கிடந்தனர்.
நிலைமை கட்டுமீறி போகவே அங்கிருந்த குச்சியால் சிலரை போலீஸார் அடித்துத் துரத்தியதோடு, தாக்குதலில் ஈடுபட்டதாக ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டனர். காவல் நிலையத்திலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஊராட்சிமன்றத் தலைவர் உள்ளிட்ட 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்
கஞ்சா விற்பனை குறித்து புகார் தெரிவித்த ஊராட்சிமன்றத் தலைவரை காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து கும்பல் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments