மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை... வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு..!
மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவதால் ராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க 10 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது..
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், அங்குள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, பல்வேறு மாவட்டங்களில் கலவரமாக உருவெடுத்தது.
கடைகள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது..
கலவரத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அமைதியைப் பராமரிக்க ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் இருந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு இணைய சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்கும் எனவும் அவர் உறுதி அளித்தார். வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் வுங்சகின் வால்டே என்ற பாஜக எம்எல்ஏ தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments