கட்டி ஒரு வாரம் தான்.. பாலத்தில் பெரிய ஓட்டை.. விழுந்தது மணல் லாரி..! தரமற்ற கட்டுமானம் காரணமா..?

0 13891

கட்டி முடிக்கப்பட்ட ஒரே வாரத்தில் லாரியின் பாரம் தாங்காமல் பாலத்தில் ஓட்டை விழுந்து லாரி கவிழ்ந்த சம்பவம் தஞ்சாவூரில் அரங்கேறி உள்ளது. ஆயிரமாண்டுகள் தாங்கி நிற்கும் கோவில்களை கட்டிய தஞ்சை மண்ணில், தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலத்தால் உண்டான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் தஞ்சை பெரிய கோயில் அமைந்துள்ள தஞ்சையில் தான் கட்டி ஒரே வாரத்தில் பாலம் ஓட்டையான சம்பவம் அரங்கேறி உள்ளது.

தஞ்சை கீழவாசல் சிராஜ்நகர் பெரிய சாலையில் ஆதாம் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. பழைய ராமேஸ்வரம் சாலை என்ற அழைக்கப்படும் நகரின் முக்கிய சாலையான இதன் வழியாக நாள்தோறும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றனர்.

பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை மணல் லாரி ஒன்று பாலத்தை கடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் லாரியின் பின்பக்க டயர்கள் இடிந்துவிழுந்த பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது.

முன்பக்க டயர்கள் யாராவது கைகொடுத்து தூக்கி விடமாட்டார்களா ? என்று ஏங்குவது போல அந்தரத்தில் தூக்கிக் கொண்டு நின்றது.

இதனை அடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று சாலையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால்தான் இடிந்துவிழுந்தது எனக்கூறி பாலம் சிமெண்ட் பூச்சு களை கைகளால் பெயர்த்து காட்டினார் லாரி உரிமையாளர்...

சம்பவ இடத்தை பார்வையிட்ட தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் அங்கிருந்தவர்களிடம் அரசியல் செய்ய வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து லாரி உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மேயரும், ஆணையரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அளவுக்கதிகமான எடையுடன் தடை செய்யப்பட்ட பாலத்தில் , பேரிகார்டுகளை அகற்றிவிட்டு ஓட்டுனர் மணல் லாரியை ஓட்டிச்சென்றதால் பாலம் இடிந்ததாகவும், இடிந்த பாலத்தை கட்டித்தருவதாக தங்களிடம் லாரி உரிமையாளர் எழுதிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே தரமற்ற பால கட்டுமானத்தை மறைக்க லாரி உரிமையாளர் மிரட்டப்பட்டதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments