பிக்பாக்கெட்டா அடிக்கிறீங்க... நான் வைக்கிறேண்டா பயர்... 16 பைக்குகள் பஸ்பமான பின்னணி.. காட்டிக் கொடுத்த சிசிடிவி..!

0 2321

மதுரவாயல் அருகே 16 இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். போதையில் படுத்திருந்த தன்னிடம் பிக் பாக்கெட் அடித்தவர்களை பழிவாங்கும் விதமாக பைக்கிற்கு தீவைத்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்

சென்னை மதுரவாயல், விஜிபி அமுதம் நகரில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த ஓலை குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தால் 16 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானதாக கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா ? அல்லது நாசவேலை காரணமா? என்ற கோணத்தில் கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஓலை குடிசைகளின் மேலிருந்த ஓலை மற்றும் வைகோலை எடுத்து ஒரு இருசக்கர வாகனத்தின் மீது போட்டு தீ வைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து தீ குடிசைக்கு பரவி அங்கு நிறுத்தப்பட்டிருந்த 16 பைக்குகள் தீக்கிரையானது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவைப்பில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும், கொத்தனாரான அவர் பட்டாபிராம் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

விசாரணையில், கடந்த தமிழ் புத்தாண்டு அன்று குடிபோதையில் அதே பகுதியில் படுத்து இருந்த ராமச்சசந்திரனின் செல்போன், பர்ஸ் ஆகியவற்றை சிலர் திருடிச்சென்றதாகவும் அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது அவதூறாக பேசி விரட்டியதால் ஆத்திரமடைந்த அவர், தன்னை திட்டிய அருள் என்பவரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிக்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி சம்பவத்தன்று இரவு அங்கிருந்த ஓலை மற்றும் வைக்கோலை எடுத்து அருளின் இருசக்கர வாகனத்தின் மீது போட்டு தீ வைத்ததாகவும், அது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஓலை குடிசை மற்றும் மற்ற இருசக்கர வாகனங்களுக்கும் பரவியதால் அங்கிருந்து தப்பி சென்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்தார் . இதையடுத்து பயர் ராமச்சந்திரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments