15 ஏக்கரில் செயற்கை வனம்... கட்டாந்தரையைக் காடாக்கிய வனக் காதலர்..!
காஞ்சிபுரம் அருகே 14 ஆண்டுகளாக இயற்கையுடன் இயைந்து, 15 ஏக்கர் பரப்பளவில் விவசாயி ஒருவர் உருவாக்கிய காடு விழிகளை விரியச் செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒழையூர் ஊராட்சிக்குட்பட்ட கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாசிலாமணி.
இயற்கை மீது கொண்ட நேசத்தால், தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு செடிகள், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார். இன்று 15 ஏக்கர் நிலமும் பச்சை பசுமை கொஞ்சும் வனமாக மாறி நிற்கிறது.
தற்போது இந்த வனத்தில், சந்தனம், செஞ்சந்தனம், நாகலிங்கம், வேங்கை, ஆப்பிள் உள்ளிட்ட அரிய வகை மரங்களும், கருந்துளசி, கருநொச்சி, காட்டாமணக்கு, கருந்தொண்ணை, கல்யாணமுருங்கை, வெள்ளருக்கு, இளமஞ்சு போன்ற பல்வேறு மருத்துவக் குணம் கொண்ட செடிவகைகளுடன் சேர்த்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், மரங்களை வாழ்விடமாகக் கொண்டு 2,000 பறவைகளும் கூடு கட்டி வாழ்கின்றன.
மருத்துவக் குணம் கொண்ட மூலிகை செடிகள் நிறைந்துள்ளதால், இப்பகுதியை சுற்றி பல ஏக்கரில் விவசாய நிலங்களில், பூச்சித்தாக்குதல் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும் இந்த வனத்தில் உள்ள அரிய வகை மரங்களை ஆவலோடு வந்து பார்த்து செல்கின்றனர்.
திருமண விழாக்களில் அன்பளிப்பாகவும், பள்ளி மற்றும் கோவில்களுக்கு இலவசமாகவும் மரக் கன்றுகளை வழங்கிவருவதாகக் கூறுகிறார் மாசிலாமணி.
Comments