வீட்டில் பிறந்த 13 குழந்தைகள்.. அரசு மருத்துவ குழுவுக்கு பயந்து காட்டில் பதுங்கிய பெண்.! கணவரை கூட்டிச்சென்று கஜக்..!

0 8482

13 குழந்தைகளை வீட்டு பிரசவத்தில் பெற்றெடுத்த பெண் குடும்ப கட்டுப்பாடு செய்ய மறுத்த நிலையில் அவரது கணவரை அழைத்துச்சென்று சுகாதாரத் துறையினர் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி, இங்குள்ள ஒன்னகரை கிராமத்தை சேர்ந்த சின்னமாதன் மனைவி சாந்தி தான் வீட்டுபிரசவத்தில் 13 குழந்தைகளை பெற்ற மகராசி..!

சோழகர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர், இவர்கள் தங்களுக்கு உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சாந்தி மீண்டும் கருத்தரித்தார், தொடர்ந்து சாந்தி கருத்தரிப்பை அறிந்த மருத்துவ குழுவினர் அவரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம் ஏற்படும் உடல் பிரச்சினைகளை எடுத்து கூறி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள எவ்வளவு எடுத்துக் கூறியும் அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டார்.

இதே போல் ஒவ்வொரு முறையும் மருத்துவ குழுவினர் செல்லும் போதெல்லாம் வெவ்வேறு பகுதிக்கும், வனப்பதிகுள்ளும் சென்று மறைந்து கொள்ளுவார்,மேலும் அவரது கணவரான சின்ன மாதன் வந்த மருத்துவக் குழுவினரை வசைப்பாடி அனுப்பி விடுவார், இதன் காரணமாக மருத்துவ குழுவினர் நொந்து போயினர்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாந்தி 13 வதாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

அதில் 8 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள் , 13 குழந்தைகளையும் அவர் வீட்டிலேயே பெற்றெடுத்துள்ளார், அதில் ஒரு முறை இரட்டை குழந்தை பெற்றெடுத்ததாக கூறப்படுகின்றது.

இதுவரையிலும் மருத்துவமனைக்கு சாந்தி சென்றதே இல்லை என்று கூறப்படுகின்றது.

இவருக்கு முதலாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு திருமணமும் முடிந்து மனைவியுடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

13 வது குழந்தை பிறந்த தகவல் அறிந்து அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர், காவல் துறையினர் வருவாய்த்துறையினர சின்ன மாதனின் வீட்டிற்கு சென்று பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு, உடல்நலத்தை பரிசோதித்தனர்.

குழந்தை 3 கிலோ எடையுடன் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்த மருத்துவ குழுவினர், சாந்தியின் உடலை பரிசோதனை செய்ததில் ரத்ததின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டதை அடுத்து சாந்தியிடம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருமாறு எடுத்துரைத்தனர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சாந்தி வர மறுத்துவிட்டார்.

இதையடுத்து கணவர் சின்ன மாதனிடம் மருத்துவர் சக்தி கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

சுமார் மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சின்ன மாதன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தார்

சின்ன மாதன் சம்மதத்தை அடுத்து உடனடியாக அங்கிருந்து மருத்துவர் சக்தி கிருஷ்ணன் குடும்ப நல இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஹரி பிரகாஷை அழைத்துக் கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.

பர்கூர் மலைப்பகுதியில் இருந்து சின்னமாதனை மருத்துவ குழுவினர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்

அங்கு வைத்து சின்னமாதனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , உடனடியாக ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னர் சின்ன மாதன் நலமுடன் 102 வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து குடும்ப நல இணை இயக்குனர் ராஜசேகரன் அளித்த பேட்டியில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவித்தவர், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் ஆண்மை குறைபாடு ஏற்படும் என தவறான புரிதல் ஆண்களிடம் உள்ளது ஆனால் எந்த ஒரு ஆண்மை குறைவும் ஏற்படாது அதேபோல் அவர்கள் எப்பொழுதும் போல் உடல் உறவில் ஈடுபடலாம் என்றும், எந்தவித பக்க விளைவுகள் இல்லை என்றும் தெரிவித்தார்,

எனவே மலைப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாதுகாப்பான இந்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

பர்கூர் மலைப்பகுதியை பொறுத்தவரை சோழகர் இன பழங்குடியினர் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து வருவதாகவும், இதன் காரணமாக மூன்று முதல் ஆறு குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டு பல பெண்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்த மருத்துவ குழுவினர், அதிக குழந்தைகள் பெற்ற பெண்களை அணுகி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தனர்.

ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கும் இளைய தலைமுறை மத்தியில் ஒரு டஜன் குழந்தைகளை பெற்ற பின்னரும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய மறுத்த சாந்தியை மருத்துவ குழுவினர் வியப்புடன் பார்த்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments