சொத்துக்காக சகோதரனை கூலிப்படையை ஏவி கொன்ற சகோதரிகள்..! உதவிய தாயும் போலீசில் சிக்கினார்

0 2384

காரைக்குடி அருகே சொத்துக்காக கூலிப்படை வைத்து சகோதரனை கொலை செய்த இரு சகோதரிகளையும், தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு உயிரோடு இருந்தால், தனது மகள்கள் சொத்துக்களை அனுபவிக்க முடியாது என்று தாய் சொன்ன வார்த்தை வினையான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாச்சுழியேந்தல் பகுதியில் வசித்து வந்தவர் அழகேசன். இவர் காரைக்குடியில் உள்ள யூகோ கிளை வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திரா, இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

3 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்த நிலையில், மகன் அலெக்ஸ் பாண்டியன் மட்டும் திருமணமாகாமல் உள்ளூரில் சண்டியர் போல வலம் வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கிடா வெட்டி விருந்து வைத்த போது, அதனை சாப்பிட்ட அழகேசன் உடல் நலக்குறைவால் பலியானதாகவும், அதன் பின்னர் அலெக்ஸ் பாண்டியன் தாய் மற்றும் சகோதரிகளை மதிக்காமல் ஊதாரியாக பணத்தை செலவழித்ததோடு, சொத்தில் பங்கு கிடையாது என்று விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அலெக்ஸ் பாண்டியன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக தாய் இந்திரா புகார் அளித்தார்.

இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, தாயின் புலம்பல் கொலையில் முடிந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

'ஆண் வாரிசு உயிரோடு இருக்கும் வரை உங்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்காது' என்று அழகேசனின் மனைவி இந்திரா தனது மகள்களான கலையரசி மற்றும் தமிழரசியிடம் செல்போனில் அழுது புலம்பி உள்ளார்.

இதையடுத்து சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்த கலையரசி தனது சகோதரி தமிழரசி மற்றும் தாய் இந்திராவிடம் ஆலோசித்து அலெக்ஸ் பாண்டியனை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

தனது ஆண் நண்பர் மூலம் மதுரையைச் சேர்ந்த வினீத் என்ற கூலிப்படை தலைவனிடம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தந்துவிடுவதாகக் கூறி அலெக்ஸை கொலை செய்ய ஏவி உள்ளனர்.

முதற்கட்டமாக தங்கள் நகைகளை அடகு வைத்து வினீத் வங்கிக் கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

சம்பவத்தன்று வினீத்தின் கூலிப்படை வந்ததும், தாய் இந்திரா கதவை திறந்து வைத்துள்ளார். கூலிப்படையினர் வீட்டுக்குள் புகுந்து அலெக்ஸை கொலை செய்து விட்டு தப்பிவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த கலையரசி, தமிழரசி, இந்திரா, கூலிப்படை தலைவன் வினீத், விஜயகுமார், வெங்கடேஸ்வரன், அழகர், அந்தோணி, அப்துல் அஜிஸ் ஆகிய எட்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சொத்தில் பெண் வாரிசுகளுக்கும் பங்கு உண்டு என்று அரசு சட்டம் கொண்டு வந்தாலும், ஆணாதிக்க மனோபாவத்தால் சொத்தில் பங்கு கொடுக்க மறுத்து அடாவடி செய்ததால் பெற்ற தாயும், சகோதரிகளும் கூலிப்படையை ஏவும் விபரீத மன நிலைக்குச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். அதே நேரத்தில் வங்கி மேலாளர் அழகேசனின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுவதால் அது குறித்தும் விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments