அதிமுக பொதுச் செயலாளரானார் இபிஎஸ்.! ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு.!

0 2343

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மேலும் பலர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டதோடு, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு , பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாதென தடை விதித்திருந்தார்.

இந்த வழக்குகள் மீது உயர்நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு இன்று காலை தீர்ப்பளித்தார்.. அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தும் வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்தார். இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை பிரதான சிவில் வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் என்றும், தற்போதைய நிலையில் ஏழு நாட்களுக்கு முன் விளக்கம் கோரி நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள நீதிபதி, இருப்பினும், சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது கோடியே 55 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் கட்சியில் இருந்து மனுதரார்களை நீக்கிய தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது என தனது 85 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோரை கொண்ட 2 நீதிபதிகள் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments