பீகார் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ்குமார்

பீகார் முதலமைச்சராக 8வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார் நேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் என 160க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.
ஏற்கனவே அறிவித்தபடி பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் 8வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவி ஏற்றதும், நிதிஷ்குமாரும், தேஜஸ்வியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தங்களது கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றார்.
இதனிடையே 45 எம்எல்ஏக்களை கொண்டுள்ள நிதிஷ்குமார் பெயருக்குத்தான் முதலமைச்சராக இருப்பார், உண்மையில் முதலமைச்சராக செயல்படப் போவது 79 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தேஜஸ்வி யாதவ்தான் என்று முன்னாள் துணை முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில்மோடி விமர்சித்துள்ளார்.
Comments