புதுப்பித்துக் கட்டிய விசுவநாதர் கோவில் திறப்பு.. பிரதமர் மோடி வழிபாடு.!

0 2471

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கையில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி காசி விசுவநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். 339 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பித்துக் கட்டப்பட்ட கோவிலைத் திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காசி விசுவநாதர் கோவில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு டெல்லியில் இருந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடியை உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் படகில் ஏறிக் கங்கையாற்றின் வழியே காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்றனர். அப்போது மற்ற படகுகளில் உலா வந்தோருக்கும், கரையில் நின்ற பொதுமக்களுக்கும் கையசைத்தும் கைகுவித்தும் பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்.

படகுத்துறையில் இருந்து விசுவநாதர் கோவில் வரை சிவப்புக்கம்பளம் விரித்துப் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தைப் பார்வையிட்ட பிரதமரை இசைக்கலைஞர்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.

 கங்கையில் இருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு விசுவநாதர் ஆலயத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்குச் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்து தீப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

 கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்ட பிரதமர் அதற்குத் தண்ணீர் ஊற்றினார்.கோவில் கட்டுமானப் பணியைச் செய்து முடித்த தொழிலாளர்கள் மீது மலர்களைத் தூவியதுடன், அவர்களுடன் அமர்ந்து குழுப் படம் எடுத்துக் கொண்டார்.

சுற்று மண்டபம், கோவில், உணவகம், அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், பக்தர்கள் தங்கும் விடுதி, சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட புதிய விசுவநாதர் கோவில் வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments