''ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு" மாநாடு தொடக்கம்

0 2663
''ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு" மாநாடு தொடக்கம்

சென்னையில் ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுமார் 2ஆயிரத்து120 கோடி ரூபாய் முதலீட்டில் 41695 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

சென்னை கலைவாணர் அரங்கில் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 21 ஏற்றுமதி நிறுவனங்கள், மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு ஆகியவற்றையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லையில் 425 கோடி ரூபாயில் 1600 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஜவுளி உற்பத்தி திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் பொது உற்பத்தி திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் முதலீட்டில் ஆர்கானிக் உரங்கள் உற்பத்தித் திட்டம், திருவள்ளூரில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் ஆகியவை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இ - காம்மர்ஸ் தளங்களில் பயிற்சி அளித்து, உலகளாவிய சந்தைகளுக்கு தயார்படுத்த பிளிப்கார்ட், வால்மார்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்றுமதியில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றார்.

ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்களுக்கு தனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற முதலமைச்சர், காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சின்னாளப்பட்டி சுங்குடு சேலைகள், மதுரை மல்லி, சிறுமலை வாழைப்பழம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் அடையாளமாக உள்ள பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த வேண்டும் எனவும், அவற்றை அதிகமான அளவில் தரம் குறையாமல் தயாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments