திருடன் வீட்டு சீர்வரிசை... திருடுரத விட விற்பதில் பாஸ்ட்..! அசந்து போன போலீசார்

0 15253
திருடன் வீட்டு சீர்வரிசை திருடுரத விட விற்பதில் பாஸ்ட்..! அசந்து போன போலீசார்

சென்னையில் கொள்ளையடித்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விற்று, பெங்களூரில் விலை உயர்ந்த ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், படுக்கை, கார் ஆகியவற்றை ஒரே நாளில் வாங்கிக் குவித்துள்ளான் கொள்ளையன் ஒருவன். கல்யாண சீர்வரிசை போல காவல் துறையினர் வசம் சிக்கிய திருட்டுப் பொருட்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் ஜெயின். கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், கடந்த 25 ஆண்டுகளாக உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று ராஜேந்திர குமார் ஜெயின் கடைக்கு வந்த நபர், ஊழியரான மனோஜ் என்பவரிடம், தான் கடை உரிமையாளரின் நெருங்கிய நண்பர் என பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். தேநீர் வாங்கி வருமாறு ஊழியர் மனோஜிடம் கூறி அனுப்பிவிட்டு, தேநீர் வாங்கிக்கொண்டு கடைக்கு வருவதற்குள் அந்த நபர் கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

அங்கு கைவரிசை காட்டியது சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் நூதன முறையில் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த பழைய குற்றவாளி முகமது சமீர் என்பதை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர்.

மும்பை சென்று கொள்ளையன் முகமது சமீரை காவல்துறையினர் பிடித்தனர். விசாரணையில் முகமது சமீருக்கு 2 மனைவிகள் என்பதும் முதல் மனைவி சம்சியா அஞ்சும் மும்பையிலும், இரண்டாவது மனைவி ஷாருதீன் பெங்களூரிலும் இருக்கும் தகவல் தெரியவந்தது. தான் ஒவ்வொரு முறை கொள்ளையடிக்கும் பணத்தை, முகமது சமீர் இரு மனைவிகளுக்கும் மாறிமாறி கொடுத்து வந்ததால், தனிப்படை பெங்களூருக்கும் விரைந்தது.

சம்பவத்தன்று நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்ததும், வாடகைக் காரில் பெங்களூரு சென்ற சமீர், கொள்ளையடித்த பணத்தில் விரைவாக பொருட்கள் வாங்கி குவித்துள்ளான். புது மாருதி ஸ்விஃப்ட் கார் ஒன்றை வாங்குவதற்கு முழுப்பணம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளான். தனது இரண்டாவது மனைவி ஆசையாகக் கேட்டதால் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பிரிட்ஜ், 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாஷிங் மெஷின் மற்றும் 70 ஆயிரம் ரூபாயில் ஷோபாசெட் ஆகியவற்றை வாங்கி பெங்களூரு வீட்டில் வைத்து விட்டு அங்கிருந்து மும்பைக்குச் சென்றது தெரிய வந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கியவை என்பதால் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், சோஃபா உள்ளிட்ட பொருட்களை சரக்கு லாரி ஒன்றை வாடகைக்கு எடுத்து, இந்தப் பொருட்களையெல்லாம் லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னை கொண்டு வந்துள்ளனர் தனிப்படை போலீசார்.

தனது மகளின் திருமணத்துக்கு வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையன் கவனத்தை திசைதிருப்பி களவாடி சென்றதாக ராஜேந்திரகுமார் ஜெயின் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், கொள்ளையன் வீட்டில் இருந்து உண்மையிலேயே கல்யாண சீர்வரிசை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு வந்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட பொருட்களை எல்லாம் சென்னையில் இறக்கிய போலீசார், பணத்தை இழந்தவரிடம் நீதிமன்றம் மூலமாக அவை ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments