தகிக்கும் வெயில் குளிர்பானத்துக்கு கையேந்தும் தாய்குலம்..!

0 10818
தகிக்கும் வெயில் குளிர்பானத்துக்கு கையேந்தும் தாய்குலம்..!

நெய்வேலியில் திமுக பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்து ஆட்டம் போட்டு களைத்த தாய்குலங்கள், தகிக்கும் வெயிலை சமாளிக்க குளிர்பானத்தை பெற கையேந்தியவாறு கூட்டத்தில் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் திமுக பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் ஸ்டாலின் தான் வராரு.. பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர்

குறிஞ்சிப்பாடி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முண்டியடித்த பெண்கள் கூட்டத்தால் பிரச்சாரம் களை கட்டியது.

கொளுத்தும் வெயிலிலும் போட்டிபோட்டு ஆடிக்களைத்த தாய்க்குலங்கள் தண்ணீருக்கு தவித்த நிலையில் வாகனம் ஒன்றில் வைத்து இலவசமாக குளிர் பான பாட்டில்கள் வழங்கப்பட்டன.

அந்த வண்டியை சுற்றி கையேந்தியவாறு முண்டியடித்த பெண்கள் தங்கள் கைகளுக்கு குளிர்பான பாட்டில் கிடைத்தவுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். சில பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் குளிர்பான பாட்டிலுக்கு கையேந்திக் கொண்டு இருந்தனர்

கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில் ஏதோ பூக்களை எடுத்து தூவுவது போல குளிர்பான பாட்டில்களை மொத்தமாக தூக்கி கூட்டத்துக்குள் வீச அதனை எடுப்பதற்கு பெண் தொண்டர்களும், ஆண் தொண்டர்களும் அடித்துக் கொண்டதால் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சிலருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. பலரது காலணிகள் அறுந்து விட்டால் போதும் என்று கலைந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கொளுத்தும் வெயிலால் ஏற்பட்ட தாகத்தின் கொடுமையால், தொண்டர்கள் ஒவ்வொருவரும் குளிர்பான பாட்டிலுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். என்றாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்து வரும் போதே அவர்களது கைகளில் பதாகைகளை வழங்கியது போன்று தேவையான தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை கொடுத்து இருந்தால் இது போன்று கூட்டத்தில் நெருக்கி அடித்து கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது.

அதே நேரத்தில் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபரீத விபத்துக்களும் முன் எச்சரிக்கையாக தவிர்க்கப்படும்..! என்பதே இக்காட்சிகளை பார்ப்போரின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments