மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்... கள்ளச்சாராய வியபாரிகள் 9 பேருக்கு தூக்கு தண்டனை... 4 பெண்களுக்கு ஆயுள்!

0 3059

பீகார் மாநிலத்தில், 2016 - ம் ஆண்டு சட்ட விரோதமாகக் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் உயிர் இழந்தனர். ஆறு பேருக்குக் கண் பார்வை பறிபோனது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கு மரண தண்டனையும் நான்கு பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

பீகார் மாநிலத்தில், 2016 - ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மது விற்பனை செய்யவும், மது பருகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அங்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் ஆசிர்வாதத்தால் கள்ளச்சாராய விற்பனை படு ஜோராகவே நடந்து வருகிறது. 2019 -2020 ம் ஆண்டின், தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் படி பீகார் மாநிலத்தில் இருப்பவர்கள் தான் நாட்டிலேயே அதிகளவு மது பருகுறார்கள். பீகார் மாநில ஆண் மக்கள் தொகையில் 15.5 சதவிகிதம் பேர் மது அருந்துபவர்களாக உள்ளனர். நகர்ப்புற மக்களை விடவும் கிராமப்புற மக்கள் அதிகளவில் கள்ளச் சாராயத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

பீகார் அரசு மது விற்பனைக்குத் தடை விதித்தாலும், பீகார் கிராமப் புறங்களில் கள்ளச்சாராயம் ஓடுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. 2016 - ம் ஆண்டு மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் மஞ்சா தொகுதிக்கு உட்பட்ட கஜூர்பானி பகுதியில் நடைபெற்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. சட்ட விரோதமாக, தோட்டத்தில் காய்ச்சிய கள்ளச் சாராயத்தைக் குடித்த கிராம மக்கள் 19 பேர் மயங்கி விழுந்து, ரத்தம் கக்கி மரணமடைந்தனர். 6 பேர் கண் பார்வை பறிபோனது. பீகார் மாநில அரசு இறந்தவர்கள் குடும்பத்துக்கு 4 லட்சம் இழப்பீடுகளை அப்போது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து, காவல் துறையினர் நடத்திய சோதனையில், நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டருக்கும் அதிகமான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாக நாகினா பாசி என்பவனின் பெயர் சேர்க்கப்பட்டது. அவனுடன் மேலும் 13 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

கோபால்கஞ்ச் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கள்ளச்சாராய வழக்கு விசாரணையின் போது, கள்ளச்சாராயம் விற்ற கூட்டத்துடன் தொடர்பிலிருந்ததாக மூன்று துணை ஆய்வாளர்கள், ஐந்து உதவி துணை ஆய்வாளர்கள் மற்றும் 13 காவலர்கள் உட்பட மொத்தம் 21 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளில் ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட எஞ்சிய 13 பேரும் குற்றவாளிகளாக மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர்களில் 9 பேருக்கு மரண தண்டனையும் நான்கு பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு தொடர்பாக, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், “இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் கஜூர்பானி பகுதி மிகவும் வறண்ட பகுதியாகும். இங்கு வாழும் மக்கள் ஏழ்மை நிலையில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கின்றனர். அதனாலேயே, இங்குள்ளவர்களில் பெரும்பாலும் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments