பாட்டி சோ... க்யூட்.... 101 வது பிறந்த நாள் கொண்டாடி அசத்தல்!

0 1897
கேக் வெட்டும் பாட்டி பழனியம்மாள்

ஸ்ரீவில்லிப்புதூரில் மூதாட்டி ஒருவர் தன் 101 வயது பிறந்த நாளை உறவினர்கள், பேரன் ,பேத்திகளுடன் உற்சாகமாக கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாறிப்போன இயற்கைச்சூழல் அதோடு மாறுபட்ட உணவு பழக்க வழக்க முறை போன்ற காரணங்களால் மனிதனின் ஆயுள்காலம் குறைந்து கொண்டே போகிறது. பழங்காலத்தில் 100 வயது வரை மக்கள் சர்வசாதாரணமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் முக்கிய காரணமாக இருந்தது. தற்போது துரித உணவு பழக்கம் காரணமாக துரிதமாகவே மனித வாழ்வும் முடிந்து விடுகிறது. இயந்திரமயமான வாழ்க்கையில் இளம் வயதிலேயே மனிதனுக்கு பல நோய்கள் வந்துவிடுகிறது. அவசரகதியில் பரபரப்புடன் வாழும் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து யோசிக்க கூட நேரமில்லை. கிடைத்த உணவை உண்டு காலம் போகிற போக்கில் வாழ்ந்து விட்டு மனிதன் போய் விட நினைக்கிறான்.

இத்தகைய சூழவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாபட்டியை சேர்ந்த மகாதேவன் என்பவரின் மனைவி பழனியம்மாள் என்பவர் 101வது பிறந்தநாள் கொண்டாடி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர், தன் குடும்பத்தில் 5 தலைமுறையை பார்த்துள்ளார். பழனியம்மாள் பாட்டிக்கு 4 மகன்கள் 3 மகள்கள், 19 பேரன், பேத்திகள்.25 கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள், மற்றும் 2 எள்ளு பேத்திகளும் உள்ளனர். இந்த நிலையில், பழனியம்மாள் பாட்டி நேற்று தன் 101வது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினார். பாட்டியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அவரின் உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

விழாவில் தலையில் கிரீடம் அணிந்து பங்கேற்ற பழனியம்மாள் பாட்டி கேக் வெட்டி பேத்திகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். உறவினர்கள் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். மேலும், வெளியூர்களில் இருந்து விழாவுக்கு வர முடியாதவர்கள் செல்போனில் வீடியோ காலில் அவரை வாழ்த்தியதோடு ஆசிர்வாதமும் பெற்றனர்.

பாட்டிக்கு பாத பூஜை செய்தும் பெண்கள் நல்லாசி பெற்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இந்த பழமொழிக்கு பொருத்தும் வகையில் இந்த வயதிலும் ஆரோக்கியத்துடன் வாழும் பழனியம்மாள் பாட்டி, தன் வேலைகளை தானே பார்த்துக் கொள்கிறார் என்றும் கண்ணாடி போடாமல் செய்திதாள் படிப்பார் என்றும் அவரின் சொந்தங்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments