கரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..! கூட்டாஞ் சோறு ருசிக்குமா ?

0 7396
கரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..! கூட்டாஞ் சோறு ருசிக்குமா ?

2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடம் கறாராக அதிக தொகுதிகள் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் 10 ஆண்டுகளில் கரைந்தும் தேய்ந்தும் கொடுக்கின்ற தொகுதிகளை பெற்றுக் கொள்ளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் 2021 தேர்தலில் போட்டியிடும் கனவில் மிதந்த நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெம்பாக இருந்த காலகட்டத்தில் விழுப்புரமே குலுங்கிய தேமுதிக மாநாட்டில் திரண்ட கூட்டத்தை கண்டு மிரண்டு போன அதிமுக தலைமை 2011 சட்ட மன்றதேர்தலில் தேமுதிகவுக்கு 41 இடங்களை ஒதுக்கி கவுரவப்படுத்தியது.

அந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த அதிமுக வெற்றிக் கூட்டணியால் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தார். 10 வருடங்கள் கடந்த நிலையில் அரசியல் சூழல் முற்றிலும் மாறிப்போயுள்ளது. தற்போது விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கியதால், கட்சியை பிரேமலதாவும், அவரது சகோதரர் எல்.கே. சுதீஷும் வழி நடத்துகின்றனர்.

இந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவர்த்தைக்கு பா.ம.க வை அழைத்து 23 தொகுதிகள் வழங்கிய அதிமுக தலைமை, தேமுதிக கேட்கும் தொகுதிகளை கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றது. குறைந்த பட்சம் 25 தொகுதிகளாவது வேண்டும் என அடம் பிடித்த தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினரிடம், அதிக பட்சமாக 15 தொகுதிகளை மட்டுமே விட்டுத்தர இயலும் என்று கூறிய நிலையில் தங்கள் மவுசு குறைந்திருப்பதை உணராமல், கூட்டணிக்காக அதிமுக தான் தங்களிடம் கெஞ்சுவதாக எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக என இரு கட்சிகளிடம் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது போல இந்த முறை கூடுதலாக கமல் கட்சியிடனும் தேமுதிக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேமுதிக நிலமை இப்படி இருக்க, 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் கெத்தாக 63 தொகுதிகளை பெற்ற காங்கிரஸை, திமுக பேச்சுவார்த்தை குழு இந்த முறை உண்மையிலேயே ஒரு கை பார்த்து விட்டது என்று கூறப்படுகின்றது.

2016 சட்டமன்றதேர்தலில் கூட காங்கிரசுக்கு 41 தொகுதிகளை விட்டுக் கொடுத்த திமுக, இந்த முறை 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சம்மதித்த நிலையில் ஒரு கைப்பார்போம் என்று ராகுல் ஊர் ஊராய் தாவி குதித்து தண்டால் எடுத்து நடனம் ஆடியதன் பலனாய் 27 இடங்களை ஒதுக்க சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..!

கொடுப்பதை பெற்றுக் கொண்டால் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற ஒதுக்கீடு கூட காங்கிரஸுக்கு கிடைக்காமல் கரைந்து போன நிலை ஏற்படும் என்பதால் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களோ கமலிடம் பேசலாமா ? இல்லை தனித்து நிற்கலாமா ? என்று மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருறார்களாம்.

கடந்த முறை வரை தேர்தல் களத்தில் கூட்டணியில் வெற்றியை நிர்ணயிக்கும் அத்தியாவசிய கட்சிகளாக கருதப்பட்ட தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளை தேவையில்லாத சுமையாக கருதியதால் இந்த தேர்தல் களம் கடுமையாக சோதித்து வருகின்றது.

இதனால் கொடுத்ததை பெற்றுக் கொண்டு கொள்கை.. கோட்பாடு.. லட்சியம்... என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்ளும் ஜென் மன நிலைக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இத்தனை மனக்கசப்புகளுடன் வேண்டா வெறுப்பாக கூட்டணியில் இணைந்து தேர்தல் களத்தை சந்திக்க இருக்கும் இந்த கட்சிகளின் தொண்டர்களால் தேர்தல் கூட்டாஞ்சோறு ருசிக்குமா ? என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments