‘அவர்கள் என் வீட்டுக்குள் நுழைந்து முகத்திலேயே குத்தினர்... என் பல்லே உடைந்துவிட்டது’ - குண்டர்களால் தாக்கப்பட்ட பாஜக தொண்டர் கண்ணீர்!

0 4791

மேற்கு வங்க மாநிலத்தில், பாஜவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக பாஜக தொண்டரும் அவரது 80 வயது தாயாரும் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் அரசியலாகியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் கட்சியினரும், பாஜகவினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில், மார்ச் மாதம் 27 - ம் தேதி தொடங்கும் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்லாமல் தொண்டர்களும் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான், மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான பாரங்காஸில் சனிக்கிழமையன்று, பாஜக தொண்டரான கோபால் மஜூம் தார் வீட்டுக்குள் நுழைந்த குண்டர்கள் மூன்றுபேர் கொடுமையாகத் தாக்குதல் நடத்தினர். வீட்டுக்குள் நுழைந்தவர்கள், கைத்துப்பாக்கியால் கதவை சுட்டுள்ளனர்.

பிறகு, பாஜக தொண்டர் கோபால் மஜூம்தாரும் அவரது 80 வயது தாயார் ஷோவா மஜூம்தாரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் கோபால் மஜூம்தாரின் பற்கள் உடைந்தன. கோபால் மஜூம்தாரின் தாயின் முகம் வீங்கும் அளவுக்கு குண்டர்கள் தாக்கியிருந்தனர்.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வழக்குப் பதிவு செய்து தாக்கப்பட்ட கோபால் மஜூம்தார் மற்றும் ஷோவா மஜூம் தாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 80 வயது ஷோவா மஜூம்தா, “அவர்கள் என் தலையிலும் கழுத்திலும் தாக்கினர். என் முகத்தில் குத்தினர். எனக்கு பயமாக இருக்கிறது. இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். என் உடல் முழுவதும் தாங்க முடியாத அளவுக்கு வலிக்கிறது” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இது குறித்து கோபால் மஜூம் தார், “அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து என்னைத் தாக்கினர். துப்பாக்கி முனையால் என் தலையில் அடித்தனர். என்னைத் தாக்கியது யார் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. அவர்கள் திரிணாமுல் கட்சி குண்டர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து பாஜக, “திரிணாமுல் கட்சி குண்டர்களால் பாஜக தொண்டர் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டார். மம்தா தீதி வயதான பெண்ணின் வேதனைக்கும் கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று கூறியிருந்தது.

இந்தத் தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது குறித்து, திரிணாமுல் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரையன், “இது பாஜக மேற்கொள்ளும் பொய் பிரச்சாரம்” என்று சாடியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments