19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்கெட்..!

0 3870
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்

அமேசானியா 1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி - சி 51 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிரேசில் நாட்டின் விண்வெளி ஆய்வுத் துறையால் புவிக் கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டது 637 கிலோ எடைகொண்ட அமேசானியா 1 செயற்கைக் கோள்.

இந்தச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் பெற்றது. அதனுடன் இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 5 சிறிய செயற்கைக்கோள்கள், அமெரிக்காவின் 13 சிறிய செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது.

சென்னைக்கு அருகே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்றுக் காலையில் இருந்து கவுன்ட் டவுன் தொடங்கியது. திட்டமிட்டபடி சரியாக இன்று பகல் 10.24 மணிக்கு 19 செயற்கைக்கோள்களையும் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

விண்ணில் பாய்ந்த ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையை அடைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிரேசில் நாட்டின் அமேசானியா 1 செயற்கைக் கோள் அந்நாட்டில் அமோசான் காடுகள் அழிக்கப்படுவதைக் கண்காணிக்கவும், பன்முக வேளாண்மை தொடர்பான பகுப்பாய்வுக்கும் பெரிதும் உதவும்.

பிரேசில் நாட்டின் விஞ்ஞானிகள் குழு ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கு வந்திருந்து இந்தச் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்வையிட்டனர். இந்திய செயற்கைக் கோள்களில் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, திருப்பெரும்புதூர் ஜேப்பியார் தொழில்நுட்ப மையம், நாக்பூர் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோவை ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவையும் உள்ளன.

பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமேசானியா 1 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியதற்கு இந்தியாவும் இஸ்ரோவும் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். பிரேசில் செயற்கைக் கோள் நல்ல நிலையில் உள்ளதாகவும் அது சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சிவன், பிரேசில் விஞ்ஞானிகள் குழுவினருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments