மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் இன்றுடன் முடிவு: கண்கலங்கிய குலாம்நபி ஆசாத்

0 4881

குலாம்நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி அவரது மாநிலங்களவை பங்களிப்புகள் குறித்து பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி கண்கலங்கினார். நன்றி தெரிவிக்கும் போது பேசிய குலாம் நபி ஆசாத்தும் கண்கலங்கினார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் உள்பட 4 உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவர்களது பங்களிப்புகள் குறித்து பிரதமர் மோடி பாராட்டி பேசினார். குலாம்நபி ஆசாத்தின் இடத்தை வேறு நபரால் நிரப்ப முடியாது என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக குலாம் நபி ஆசாத் பதவி வகித்ததை நினைகூர்ந்து பேசிய போது பிரதமர் உணர்ச்சி வசப்பட்டு பேச முடியாமல் கண்கலங்கினார். சிறிது தண்ணீரை குடித்த பிறகே தனது உரையை தொடர்ந்தார். 

2005 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக குலாம் நபி ஆசாத் பதவி ஏற்பதற்கு முன்பே தனக்கு அவரை நன்றாக தெரியும் என்று குறிப்பிட்ட பிரதமர், பயங்கரவாத தாக்குதலின் போது ஜம்மு காஷ்மீரில் சிக்கிய குஜராத் மக்களை மீட்டெடுக்க ஆசாத் மேற்கொண்ட நடவடிக்கைகளை மறக்க முடியாது என்று பாராட்டிப் பேசினார். 

குலாம் நபி ஆசாத் மீண்டும் மாநிலங்களவைக்கு திரும்பி வர வேண்டும் என்று தெரிவித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரசால் அதனை செய்ய முடியவில்லை என்றால், தாங்கள் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். 

அதனைத் தொடர்ந்து நன்றி தெரிவித்துப் பேசிய குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் தான் முதலமைச்சராக இருந்த சமயத்தில் 2006 ஆம் ஆண்டு குஜராத் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலை நினைவு கூர்ந்த போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவில் வசிக்கும் அதிர்ஷ்டசாலிகளான இஸ்லாமியர்களில் தானும் ஒருவன் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய முஸ்லிம் என்பதில் தான் பெருமை கொள்வதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments